அரசியல்வாதிகள் ஜனாதிபதி நிதியத்தில் கோடிக் கணக்கில் நிதிபெற்ற முறையற்ற செயற்பாடு எஸ்.பி.திஸாநாயக்க தெரிவிப்பு

2 weeks ago



அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி அரசியல்வாதிகள் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து கோடிக் கணக்கில் நிதி பெற்ற முறையற்றதொரு செயற்பாடாகும்.

முறையான விசாரணைகளை மேற்கொண்டு நிதியை மீளப்பெறுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்-

2005 முதல் 2024 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து நிதி பெற்றுக் கொண்டவர்களின் பெயர் விவரங்களை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

உண்மையில் ஒரு சில அரசியல்வாதிகள் தங்களின் மருத்துவ சிகிச்சைக்காக 1 முதல் 10 இலட்சம் ரூபா வரையிலான நிதியை பெற்றுக் கொண்டுள்ளனர்.

இலங்கையில் மருத்துவ சிகிச்சை பெறுவதற்கான சாத்தியம் காணப்பட்ட போதிலும் ஒரு சிலர் ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பல கோடி ரூபாவை பெற்றுக்கொண்டு வெளிநாடுகளுக்குச் சென்று மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

ஏழ்மை நிலையில் உள்ள மக்களின் நலன் கருதியே 1978 ஆம் ஆண்டு ஜனாதிபதி நிதியம் ஸ்தாபிக்கப்பட்டது.

அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பல கோடி ரூபா கணக்கில் நிதி பெற்றுக் கொண்டுள்ளமை முற்றிலும் முறையற்றதொரு செயற்பாடாகும்.

ஒரு சில அரசியல்வாதிகளின் தவறான செயற்பாடுகளினால் ஒட்டுமொத்த அரசியல்வாதிகளின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது.

ஆகவே ஜனாதிபதி நிதியத்தில் இருந்து முறையற்ற வகையில் நிதி பெற்றுக்கொண்டவர்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டு அந்த நிதியை மீளப்பெறுவதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் -என்றார்.


அண்மைய பதிவுகள்