தேர்தலைப் பிற்போட முயற்சித்தால் ஜனாதிபதியையும் இந்த அரசையும் மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பார்கள்- எம்.பி. சுமந்திரன் தெரிவிப்பு
ஜனாதிபதித் தேர்தல் ஒக்டோபர் 17ஆம் திகதிக்கு முன்னர் நடத்தியாக வேண்டும். அதுதான் அரசமைப்பு ஏற்பாடு. ஏதேனும் வகையில் அதைக் குழப்பித் தேர்தலைப் பிற்போட முயற்சித்தால் ஜனாதிபதியையும் இந்த அரசையும் மக்கள் ஓட ஓட விரட்டியடிப்பார்கள்."-இவ்வாறு இன்று நாடாளுமன்றத் தில் அரச தரப்பைப் பார்த்து எச்சரிக்கை விடுத்தார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன்.
ஜனாதிபதித் தேர்தல் விடயம் தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று நாடாளுமன்றத்தில் கொண்டு வந்த ஒத்திவைப்பு வேளைப் பிரேரணையின் மீது உரையாற்றும் போதே சுமந்திரன் எம்.பி. மேற் கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் இன்று ஆற்றிய உரையின் சாராம்சம் வருமாறு:-
“ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் தான் என்பது அரசமைப்பிலும் தெளிவாக உள்ளது. அதை இப்போது உயர் நீதிமன்றமும் தெளிவுபடுத்தி விட்டது.
இந்த நிலையில் ஜனாதிபதித் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பான அரசமைப்புப் பிரிவுகளில் மாற்றம் ஒன்று கொண்டுவரப்பட வேண்டிய தேவை எதுவும் இல்லை.
ஜனாதிபதியின் பதவிக்காலத்தை ஆறு வருடங்களுக்கு மேல் நீடிப்ப தாயின் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற அரசமைப்பின் 83 (ஆ) பிரிவு இவ்விடயங்களில் சம்பந்தப்பட்டது அல்ல. அதை மாற்றி அமைக்க வேண்டிய தேவையும் இல்லை. அதை மாற்றி அமைப்பதாயின் அதற்கு சர்வஜன வாக்கெடுப்பு தேவை என்ற கருத்து இருந்ததாலேயே 19 ஆவது திருத்தம் கொண்டுவரப்பட்டபோது அதை மாற்றாமல் அப்படியே விடுகின்ற தீர்மானம் எடுக்கப்பட்டது. அப்போது பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கவின் இணக்கத்தோடுதான் அப்படியே அதை விட்டுவிட முடிவு எடுக்கப்பட்டது.
அதனால் சர்ச்சைகளோ குழப்பங்களோ ஏதுமில்லை. ஏற்கனவே ஜனாதிபதி யின் பதவிக்காலம் 5 வருடங்கள்தான் என்பது திட்டவட்டமாகத் தீர்மானிக்கப்பட்ட விடயம. இந்த 83 (ஆ)பிரிவு அரசமைப் பில் இருப்பதால் எந்தக் குழப்பமும் புதி தாக வந்துவிடாது.ஆனால், இந்தப் பிரிவுக்கு திருத்தம் கொண்டு வருகின்றோம் என்று குழம்பத்தை ஏற்படுத்த ஜனாதிபதியின் தரப்பு முயலுகின்றனர் என்று தோன்றுகின்றது.
அந்தப் பிரிவைத் திருத்த சர்வஜன வாக்கெடுப்பு என்ற நிலைப்பாடு வருமானால், அதைக் காட்டி தம்முடைய பதவிக்காலம் 5 வருடங்கள் தானா என்பதை ஒட்டிய சர்ச்சையைக் கிளப்பலாம் என்று ஜனாதிபதி எண்ணுகின்றார் போலும்.
எது, எப்படி என்றாலும், நாடு வரும் ஒக்டோபர் 17 இற்கு முன்னர் ஜனாதி பதித் தேர்தலை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது. அது சட்ட ரீதியான கட்டாயம். அதில் கை வைக்க அல்லது தேர்தலைத் தள்ளிப்போட முயற்சி எடுக்கப்பட்டால் அரசையும் ஜனாதிபதியையும் மக்கள் வீதி வீதியாக துரத்தி அடிப்பார்கள். ஓட ஓட விரட்டுவார்கள். அதனை முன் எச்சரிக்கையாகக் கூறி வைக்க விரும்புகின்றேன்." என்றார் சுமந்திரன் எம்.பி.