யாழ்.நெல்லியடியில் புடவைக் கடைக்கு தீ வைத்தவர் காங்கேசன்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நெல்லியடி பொலிஸில் ஒப்படைப்பு.
யாழ்.நெல்லியடி நகரிலுள்ள புடவையகத்துக்கு தீ வைத்த பிரதான சந்தேகநபர் காங்கேசன்துறை குற்ற தடுப்புப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
மேற்படி புடவையகத்துக்கு இரண்டு தடவைகள் தீ வைக்க முற்பட்ட நிலையில் அது முடியாமல் போயிருந்தது.
இந்நிலையில் மீண்டும் கடந்த 2ஆம் திகதி புதன்கிழமை இரவு வாள்களுடன் மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் புடைவையகத்துக்கு தீ வைத்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.
இச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று முன்தினம் மாலை காங்கேசன்துறை குற்றதடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்படும் போது வாள் ஒன்றும் பெற்றோல் குண்டு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் காங்கேசன்துறை குற்றத் தடுப்பு பொலிஸார் ஒப்படைத்துள்ளனர்.