மட்டக்களப்பில் வீடொன்றில் நித்திரையில் இருந்த 5 வயது சிறுவனை கடத்த முற்பட்ட நபரை மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
மட்டக்களப்பு - வாகரை பகுதியில் உள்ள வீடொன்றில் நித்திரையில் இருந்த 5 வயது சிறுவனை கடத்த முற்பட்ட நபரை அப்பகுதி மக்கள் மடக்கிபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
குறித்த சம்பவமானது, இன்று (17.08.2024) இடம்பெற்றுள்ளது.
வாகரை 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 5 வயதுடைய மோகன் கிரீத்தி என்ற குழந்தை, இன்று அதிகாலை 3.30 மணியளவில் தனது தாயுடன் உறங்கிக் கொண்டிருந்துள்ளது.
இதன்போது, குழந்தையின் தந்தை, சமையலறையில் இருந்து குழந்தைக்கு பால் போத்தல் எடுத்து வந்தபோது நித்திரையில் இருந்த குழந்தை காணாமல்போயுள்ளது.
இதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதி மக்கள் ஒன்று திரண்டு குழந்தையை தேடிய போது குழந்தையை கடத்திய நபர் காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றதை கண்ட மக்கள் காட்டை சுற்றி தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இதன்போது குழந்தையை காட்டில் விட்டுவிட்டு குறித்த நபர் ஒளிந்திருந்த வேளை பொதுமக்கள் குழந்தையை மீட்டு, அந்த நபரை மடக்கிபிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததுள்ளனர்.
இந்த சம்பவத்தை அடுத்து அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட நபர் வாழைச்சேனை - செம்மண் ஓடை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனவும், போதை பொருளுக்கு அடிமையானவர் எனவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த நபர் பல திருட்டுச் சம்பவங்களில் தொடர்புபட்டவர் என்பதுடன், பதிவு செய்யப்பட்ட குற்றவாளி பட்டியலில் சேர்க்கப்பட்டவர் (ஜ.ஆர்.சி) எனவும், போதைப்பொருள் வாங்க குழந்தையை கடத்தி கப்பம் பெற முயற்சித்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட நபரை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்திய போது எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.