போர்க்குற்றவாளிகளைத் தண்டிக்க தவறிவிட்டனர் -மன்னிப்புச் சபையின் செயலாளர் அறிக்கை

இலங்கையில் மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள், மதஸ்தாபனங்கள், ஊடகங்கள்,அதிகாரிகள் என அனைவருமே போர்க்குற்றமிழைத்தவர்களுக்கான தண்டனையைப் பெற்றுக் கொடுக்கத்தவறிவிட்டனர் என இலங்கை விஜயத்தை முடித்துக் கொண்டு திரும்பிய சர்வதேச மன்னிப்புச் சபையின் செயலாளர் நாயகம் அக்னஸ் கால்மார்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கை விஜயம் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பல்லாயிரக்கணக்கான மக்களை காயப்படுத்திய, பலியெடுத்த, இடம் பெயரவைத்த, பலவந்தமாக காணாமல் போகச்செய்த மூன்று தசாப்தகால உள்நாட்டு ஆயுதப்போர் முடிவடைந்து 15 வருடங்களைக் குறிக்கும் இலங்கைக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க ஆண்டாகும்.

ஆனால், இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களையும் மக்களையும் தோல்வியடையச் செய்தது அடுத்தடுத்த அரசாங்கங்கள் மட்டுமல்ல.

தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் முதல் எதிர்க்கட்சித் தலைவர்கள், மதஸ்தாபனங்கள் மற்றும் தேசிய ஊடகங்கள் வரை தலைமைப் பதவிகளில் இருப்பவர்கள் தண்டனையின்மைக்கு எதிரான போராட்டத்தை நிலைநிறுத்தத் தவறிவிட்டனர்.

எதிர்வரும் மாதங்களில் நடைபெறவுள்ள தேர்தல்கள் இலங்கையின் எதிர்காலம் மற்றும் மனித உரிமைகள் பரிசீலனைகள் ஆகியவற்றில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

 நாட்டின் அரசியல் தலைமையானது நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.

அது பிளவுகளை நிவர்த்தி செய்யும், இனங்களுக்கிடையிலான ஒற்றுமையை ஊக்குவிக்கும் மற்றும் அர்த்தமுள்ள பரிகாரங்களை வழங்கும்.

கடந்தகாலத் தவறுகளை நிவர்த்தி செய்வது அவசியம். ஒரு புதிய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.

போரின் போதும் அதன் பின்னரும் நடந்து கொண்டிருக்கும் மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உண்மை மற்றும் நீதியைப் பாதுகாப்பதற்கும், சுதந்திரமான மற்றும் நியாயமான இலங்கைக்கான அடித்தளத்தை அமைப்பதற்கும் சர்வதேச சமூகம் முன்வரவேண்டும்" - என்றுள்ளது.