மருத்துவம் தொடர்பில் செய்திகளை வெளியிடுபவர்களின் கவனத்துக்கு- வைத்தியர் முரளி வல்லிபுரநாதன்.

4 months ago


மருத்துவ அலட்சியத்தால் மன்னாரில் இறந்த இளம் தாயின் கணவர் நீதி தாமதிக்கப்பட்ட நிலையில் தவறான முடிவினை எடுத்த தகவலானது மனதைப் பெரும் வேதனைக்கு உள்ளாகியுள்ளது.

தவறான முடிவுகள் ஒருபோதும் பிரச்சினைகளுக்கு தீர்வாகாது என்பதுடன் ஊடகங்கள், மருத்துவர் ஒருவர் மற்றும் ஊடகவியலாளர்கள் ஆகிய தரப்பினர் மேலும் பொறுப்புடன் செயல்பட்டு இருந்தால் இந்த அநாவசிய இறப்புத் தவிர்க்கப்பட்டு இருக்கலாம் என்று எண்ணத் தோன்றுகிறது.

2014 இல் முதன் முதலில் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டு 2017இல் மேம்படுத்தப்பட்ட தற்கொலை தொடர்பான தகவல்களை வெளிப்படுத்துவதில் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோரின் பாரிய பொறுப்பை மீண்டும் நினைவுபடுத்துகின்றேன்.

குறிப்பாக தற்கொலையை நியாயப்படுத்துவது. தற் கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட முறைகளை வெளிப்படுத்துவது மற்றும் தற்கொலை செய்தவரின் பெயர் விபரங்களை வெளியிடுவது ஆகியவற்றால் சமூகத்தில் தாமும் பாதிக்கப்பட்டுள்ளதாக உணரும் ஏனையவர்களையும் தற்கொலை செய்யத் தூண்டும் என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மன்னாரில் இளம் தாயின் சாவைத் தொடர்ந்து ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகர்கள், வலையொளி ஊடகர்கள் எனப் பலரும் ஊடக ஒழுக்க நெறியைப் பல சந்தர்ப்பங்களில் வெளிப்படையாக மீறியுள்ளனர். முக்கியமாக இறந்தவரின் தனிப்பட்ட வாழ்க்கையை ஆராய்ந்து "யார் குற்றவாளி" என்று கருத்து வெளியிடும் நீதிபதிகளாக ஊடகவியலாளர்கள் குறிப்பாக வலையொளி பதிவாளர்கள் செயற்படுவது ஏற்கனவே குடும்ப உறுப்பினரின் உயிரிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள உறவினர்களின் மனவேதனையை அதிகரித்து வெந்த புண்ணில் வேல் பாய்ச்சி அவர்களை மோசமான முடிவுகளை எடுக்கத் தூண்டுகின்றது.

மறுபுறம் இளம் தாயின் இறப்பு தொடர்பான விசாரணையில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட சுகாதார ஊழியர்களின் பெயர்களை ஊடகங்கள் எந்தவித சுய கட்டுப்பா டும் இன்றி வெளிப்படுத்தி ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளனர்.  இதனாலேயே பல சந்தர்ப்பங்களில் பொறுப்புடன் இடைநீக்கம் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளின்போது சந்தேகத்துக்குரிய ஊழியர்கள் மீது எடுக்கப்படும் தற்காலிக நடவடிக்கை ஆகும். இரண்டு மாதங்களுக்குள் ஆரம்ப கட்ட விசாரணை பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதுடன் அதன் பின் முறையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டு சம்பவம் நடந்து 6 மாதங்களுக்குள் விசாரணை பூர்த்தி செய்யப்பட்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ஆரம்ப கட்ட விசாரணைகளில் பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பலர் பின்னர் முறையான விசாரணையில் குற்றம் அற்றவர்கள் என்று நிரூபிக்கப்பட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்ட காலத்துக்கான சம்பளத்துடன் மீண்டும் பணியில் அமர்த் தப்பட்டுள்ளதை நான் அவதானித்து இருக்கின்றேன்.

செயற்படும் ஒரு சிலரைத் தவிர ஏனைய வலையொளி பதிவாளர்களையும் சமூக ஊடகர்களையும் பொறுப்பற்ற தமது இலாபத்தையே குறிக்கோளாகக் கொண்டு செயற்படும் - பிணந்தின்னிக் கழுகுகளாகக் கருத வேண்டியுள்ளது.

அத்தோடு இவ்விடயத்தில் நேரடியாகத் தன்னார்வ அடிப் படையில் தலையிட்ட ஒரு வைத்தியர் வைத்தியத்துறையின் மீதான தனது நம்பிக்கையீனங்களை சமூகமயப்படுத்தியதால் அதாவது வைத்தியர்களைத் தான் குறைகூறியதால் அவர்கள் தமக்குப் பாதகம் செய்துவிடுவார்கள் என்ற கருத்தைக் கூறி, தனக்குத் தானே வைத்தியம் செய்து கொள்வதா கவும் தொடர்ச்சியாகக் கூறி வருவதால் சமூகத்தில் வைத்தி யத்துறையின் தவறுகளைச் சுட்டிக்காட்டியவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களும் அச்சத்தால் வைத்திய சிகிச்சை பெறுவதைத் தவிர்க்கும் நிலைப்பாட்டை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படலாம். இதன் காரணமாக வைத்தியருக்கே ஆபத்து வருமானால் நாம் எல்லாம் எம்மாத்திரம்" என்று அஞ்சி உரிய சிகிச்சைகளைப் பெறாது மக்கள் மரணிக்கும் ஆபத்து அதிகரித்திருக்கின்றது.

மன்னார் இளம் தாயின் கணவர் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆளாகியிருந்தாலும், மேற்குறிப்பிட்ட பயம் காரணமாக மருத்துவ உளவளத்துணை எதனையும் நாடாது மரணித்திருக்கக் கூடும். ஆகவே. தாமே குறித்த பாதிப்புக்குள்ளான குடும்பத்தினரைப் பாதுகாப்பதாக பகிரங்கமாகக் கூறித்திரியும் அதே வைத்தியர் உண்மையாகவே அந் தக் குடும்பத்தின் நலன்களில் அக்கறை காட்டியிருந்தால் தகுந்த உளவள ஆற்றுகைககள் ஊடாக இந்த மரணத்தைத் தவிர்த்திருக்கலாம்.

எனவே, ஆரம்ப கட்ட விசாரணைகளில் பணி இடைநீக்கம் செய்யப்பட்டவரின் பெயர் விபரங்களை அவர் இன்னமும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத நிலையில் ஊடகங்கள் வெளிப்படுத்தி சமூகத்தில் குற்றவாளியாக வெளியே நடமாட முடியாதவாறு செய்வது ஊடகங்களின் ஒழுக்க நெறியை மீறிய அராஜக செயலாகவே கருத வேண்டியுள்ளது.

இவரது மரணத்துக்குப் பொறுப்புச் சொல்ல வேண்டிய கடமை இன்னொரு தரப்பினருக்கும் சம அளவில் உண்டு. கர்ப்பகாலத் தாயார் ஒருவரது இழப்பு எவராலும் ஈடுகட்ட முடியாத இழப்பு, அதனால் அவரது குடும்பத்தவர்கள், நெருங்கியவர்கள் என அனைவரும் சுகாதாரத்துறையினரது உளவள மருத்துவப் பிரிவினர் மற்றும் தாய்சேய் நலப்பிரிவினர் ஆகியோரால் நெருக்கமான அரவணைப்பு மற்றும் ஆற்றுப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட வேண்டும். அவ்வாறு உள ஆற்றுப்படுத்துகைக்குச் சென்ற உளவளத் துணையாளர்கள் சம்பந்தப்பட்ட குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை என்றும், சுகாதாரதுறையினர் தொடர்பில் வழங்கப்படும் எதிர்மறையான தகவல்களால் சுகாதாரப் பணியாளர்களை எட்ட வைத்திருக்கவே அக்குடும்பத்தினர் விரும்பினர் என்றும் தெரியவருகின்றது.

குறித்த செயற்பாட்டால் சுகாதாரப் பணியாளர்கள் மனச் சோர்வடைந்தும், பொறுப்பற்ற ஊடக வசைச் சொற்களால் அச்சமடைந்தும் போனதால் அக்குடும்பத்தைத் தமது அர வணைப்பில் வைத்திருக்காது விலகியிருக்கலாம்.

அதேபோல் ஒரு இணையத் தளத்தில் மன்னார் இறப்பு தொடர்பாக கருத்து வெளியிட்ட வைத்தியர் செந்தூரனின் குடும்பப் புகைப்படங்களுடன் பாலியல் ரீதியாகக் கொச்சைப்படுத்தும் கட்டுரைகளை வெளியிடுவது ஊடக தர்மத்துக்கு ஒவ்வாத ஒட்டுண்ணிகளால் இயக்கப்படும் ஊடக மாபியாவின் செயற்பாடாகவே கருதவேண்டியுள்ளது. இது போலவே வைத்தியத்துறை மாபியா குழு உறுப்பினர்களினால் இயக்கப்படும் அநாமதேய முகநூல் பதிவுகள், கருத்துக்களைப் பதில் கருத்துக்களால் எதிர்கொள்ள முடியாத

கோழைகள் தனிநபர்களையும் அவர்களது குடும்பங்களையும் தனிப்பட்ட ரீதியாகத் தாக்கும் கேவலமான செயலாக எடுத்துக்கொள்ளலாம்.

இவை ஒருபுறம் இருக்க, மன்னார் இளம் தாயின் அநியாயச் சாவுக்காக இதுவரை ஒருவர் கூட கைது செய்யப்படாதது அனைவரின் மனதிலும் பெரும் கிலேசத்தினை எழுப்பியுள்ளது. ஏனைய இடங்களில் இது போன்ற சம்பவங்கள் இடம்பெற்ற வேளையில் மருத்துவ அலட்சியத்துக்குப் பொறுப்புக்கூற வேண்டிய மருத்துவர்கள் உட்பட சுகாதார ஊழியர்கள் பலரும் கைது செய்யப்பட்டுப் பிணையில் விடுவிக்கப்பட்டு இருந்தனர். உண்மையில் மன்னாரைச் சேர்ந்த சட்டவாளர்களும் ஏனைய மன்னார் சமூக செயற்பாட்டாளர்களும் பொது அமைப்புகளும் ஏழைகளின் கண்ணீருக்கு நீதி கிடைக்காத இந்தக் கேவலமான நிலையை எண்ணி வெட்கித் தலைகுனிய வேண்டும். காலம் கடந்த நீதி மறுக் கப்பட்ட நீதிக்கு சமமாகும். எனவே விரைவான நீதியைப் பெற முற்படுவதே இழந்த உயிர்களுக்கும் பிஞ்சுக் குழந்தைக்கும் செய்யும் கைமாறாக இருக்கும்.

வட பகுதியில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் நேர்மையான மருத்துவர்கள். கட்சி அரசியல் செய்யாத சட்டத்தரணிகள், சமூக நீதிக்காக குரல் கொடுப்போர் மற்றும் ஊறுபடும் நிலையில் உள்ள பெண்களுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகள் ஒன்றிணைந்து ஒரு தன்னார்வ சுயாதீனக் கட்டமைப்பினை மாவட்டங்கள் தோறும் ஏற்படுத்தி வைத்- தியசாலைகளில் இடம்பெறும் ஒவ்வொரு உயிரிழப்பிலும் மருத்துவ அலட்சியம் இருந்ததா என்பதை ஆராய்ந்து பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு உதவ முன்வரவேண்டும்.. மருத்துவ அற நெறியைக் கற்பிக்கும் ஆசிரியர் என்ற வகையில் நான் எப்போதும் எனது பக்கச்சார்பற்ற ஆலோசனைகளை வழங்கத் தயாராக இருக்கின்றேன். ஆனால், அதற்கான எழுச்சி பாதிக்கப்படும் பிராந்தியங்களில் இருந்து உருவாக வேண்டும். அதன் மூலமாகவே வவுனியா உட்பட வட பகுதியில் தொடர்ச்சியாகக் கவனக்குறைவு காரணமாக இடம்பெறும் தாய் மற்றும் சிசு மரணங்கள் தவிர்க்கப்படலாம்.

-வைத்தியர் முரளி வல்லிபுரநாதன்.