தென்னிலங்கையின் மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் அளிக்கின்ற வாக்கானது எமது தலையில் மண்ணை நாமே அள்ளிக் கொட்டுவதற்கு சமனாகும் - அரியநேத்திரன் தெரிவிப்பு.
தென்னிலங்கையின் மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கும் அளிக்கின்ற வாக்கானது எமது தலையில் மண்ணை நாமே அள்ளிக் கொட்டுவதற்கு சமமாகவே இருக் கும் என்பதற்கு மாற்றுக் கருத்து இல்லை”, என்று தமிழ்ப் பொது வேட்பாளர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் நேற்று நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்திலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தனது உரையில் மேலும் தெரிவித்தவை வருமாறு,
"சஜித் பிரேமதாஸ ஆயிரம் விகா ரைகளை கட்டுவதாகத் தெரிவித்திருக்கின்றார். இந்த நிலையில் ஏதோ ஒரு கட்சி கூறுகின்றது என்பதற்காக நீங்கள் அவருக்கு அளிக்கின்ற வாக்கானது விகாரைகளுக்கு வைக்கின்ற ஒவ்வொரு கல்லாகத்தான் இருக்கும்.
"இதேபோல் ரணில் விக்கிரமசிங்க வுக்கு நீங்கள் அளிக்கின்ற வாக்கானது இருக்கின்ற நிலங்களை இன்னும் இழந்து செல்வதாகவே அமையும். ரணில் விக்கிரமசிங்கவே ஒரு கட்ட மைப்பாக - ஒரு தேசமாக - ஓர் இனத்தின் விடுதலைக்காக ஒன்றாக இருந்த எம்மை சிதைத்தார்.
"இதேபோல, அநுரகுமார திஸ நாயக்க எமது இணைந்த வடக்கு - கிழக்கைப் பிரித்தவராக இருக்கின்றார். இவ்வாறானவர்களை தென்பகுதியில் இருந்து அழைத்து வந்து மாலை போட்டு -பொன்னாடை போர்த்தி வரவேற்கின்ற ஒரு வெட்கம்கெட்ட சமூகமாக நாம் மாறி வருகின்றோம்.
"பொதுக் கட்டமைப்பின் ஊடாக ஒரு செய்தியை சொல்ல வந்திருக்கி றேனே தவிர, ஜனாதிபதியாக வருவதற்காகவோ - நிறைவேற்று அதிகாரம் கொண்ட அந்தக் கதிரையை தட்டிப் பறிப்பதற்காகவோ இல்லை. ஈழமண்ணில் இழந்த உரிமைகளை மீட்பதற்காகவும் - நாங்கள் நாங்களாகவே இருக்கின்றோம் என்பதை சர்வதேசத்துக்கும் இந்தியாவுக்கும் ஏன் தென்னிலங் கைக்கும் காட்டவே நான் போட்டியிடுகிறேன்.
"வடக்கு - கிழக்கில் ஓர் இனமாக - ஒரு தேசமாக ஒன்றிணைந்த கட்ட மைப்புக்குள் சமஷ்டி அடிப்படையிலான ஒரு தீர்வை பெறுவதற்காக எங்களுடைய இனம் ஒன்றிணைந்து தனது ஆதரவை தெரிவிக்கின்றது என்ற செய்தியை நாங்கள் அவர்களுக்கு சொல்ல வேண்டும்.
"தேர்தல் நடைபெறவுள்ள இந்த 13 நாட்களில் பல போலியான செய்திகள் என்னைப் பற்றி வரலாம். இருபதாம் திகதி கூட அரியநேத்திரன் இவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கிறார் என்ற செய்தி கூட இந்த சமூக வலைத்தளங்களின் ஊடாக வெளிவரலாம். ஆனால், நான் எந்தமாற்றத்துக்கும் உட்படப் போவதில்லை. ஆகவே, நீங்கள் போடுகின்ற புள்ளடியானது எமது இனத்துக்கான புள்ளடி - எமது விடுதலைக்கான புள்ளடி - எமது மண் மீட்புக்கான புள்ளடி என்பதை உணர்ந்து செயல்படுங்கள்”,-என்றார்.