இலங்கை - இந்திய மீனவர் விவகாரம் - ஜனாதிபதி ரணில் மெளனம்

இலங்கை - இந்திய மீனவர் விவகாரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மௌனமாக இருக்கின்றார். இது எமக்குப் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்று அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் நேற்று(22) ஊடக சந்திப்பு நடத்திய அகில இலங்கை மீனவ மக்கள் தொழிற்சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் அ.அன்னராசா தெரிவித்ததாவது:-

வடக்கு மாகாணத்தில் நீண்டகாலமாகக் காணப்படும் இந்திய மீனவர் அத்துமீறல் பிரச்சினைக்கு எந்தத் தீர்வும் வழங்கப்படாத நிலையில், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மீண்டும் வட மாகாணத்துக்கு வரவுள்ளார்.

வடக்கு மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் 50 ஆயிரம் குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சம் மக்கள் சார்பாக அவரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைக்கின்றோம்.

தற்போதைய ஜனாதிபதி, பிரதமராகப் பதவி வகித்தபோது 2016 ஆம் ஆண்டு 11 ஆம் மாதம் 5 ஆம் திகதி இந்திய இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு புதுடில்லியில் இணக்கப்பாடு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்த இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்திய மீனவர் அத்துமீறல் பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவேண்டும்.

கடந்தமுறை ஜனாதிபதி யாழ்ப்பாணம் வந்தபோது அவர் வடக்கு மீனவர் பிரதிநிதிகளைச் சந்திக்காமல் சென்றுவிட்டார்.

இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத்தீர்வு காணப்படவேண்டும் என்பதையே ஜனாதிபதியிடம் நாங்கள் வலியுறுத்துகின்றாம். தீர்வு அல்லது இது தொடர்பாக எடுத்துள்ள நடவடிக்கைகளை வடக்கு வரும் ஜனாதிபதி தெரிவிக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார். 

அண்மைய பதிவுகள்