டக்ளஸ் தேவானந்தா பொய் கூறித் திரிவதாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பிமல் ரத்னாயக்கா தெரிவிப்பு
முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொய் கூறித் திரிவதாக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பிமல் ரத்னாயக்கா தெரிவித்துள்ளார்
மேலும், சுமந்திரனுக்கோ, சிறீதரனுக்கோ, டக்ளஸூக்கோ, யாருக்கென்றாலும் எமது அரசாங்கத்தில் பதவிகள் இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
மக்களின் காணி மக்களுக்கே வழங்கப்பட வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு.
உண்மையில் பாதுகாப்பு பிரச்சினை இல்லையென்றால் மக்களின் காணிகளை கையளிக்குமாறு நாங்கள் படைத் தளபதிகளுக்கு அறிவிக்கவுள்ளோம்.
அதற்காக மக்கள் சில மாதங்கள் பொறுமையாக இருக்க வேண்டும்.
இந்த நாட்களில், பலர் பொய் கூறி மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
டக்ளஸ் தேவானந்தா பொய் கூறுகின்றார். அவர் ஜனாதிபதியை வந்து சந்தித்தார். ஜனாதிபதி அமைச்சு பதவி தருவதாக தற்போது கூறிக்கொண்டு திரிகின்றார்.
எமக்கொன்றும் பைத்தியமில்லை. தேசிய மக்கள் சக்தியின் சார்பிலேயே அமைச்சர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.
இந்த நாட்டை அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்ற ராஜபக்சர்கள், ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் அரசாங்கங்களில் டக்ளஸ் தேவானந்தா அமைச்சு பதவிகளை வகித்துள்ளார்.
சுமந்திரனும் ஜனாதிபதியை சந்தித்தார். அவரும் ஜனாதிபதி தேர்தலில் எம்மை தோற்கடிக்க செயற்பட்டவர். அவருக்கு அமைச்சு பதவி வழங்க எமக்கு எவ்வித தேவையும் இல்லை.
நாம் யாருடனும் அரசியலில் ஈடுபடுவோம். நாம் யாருக்கும் எதிரானவர்கள் அல்ல.
எனினும், இந்த நாட்டினை அழிப்பதற்கு பல்வேறு அரசாங்கங்களில் இருந்து உதவி செய்தவர்களுக்கு தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் பதவிகள் ஏதும் வழங்கப் போவதில்லை என குறிப்பிட்டுள்ளார்.