அங்கொரு ஒரு முகத்தையும், இங்கொரு முகத்தையும் காட்டுபவர்கள் இல்லை என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு.
தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை காணும் நடைமுறைச் சாத்தியமான வழிமுறையை எவ்வாறு பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை எமக்கானது.
மாறாக உத்தரவு போடுவதற்கு இங்கு எமக்கு எவரும் எஜமானர்கள் இல்லை என தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அங்கொரு ஒரு முகத்தையும், இங்கொரு முகத்தையும் காட்டுபவர்கள் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஏற்பாட்டில் ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் யாழ்ப்பாணத்தில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட பிரசார கூட்டத்தில் இவ்வாறு தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் நாவாந்துறை சென் மேரிஸ் பிளையாட்டு மைதானத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையில் குறித்த பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
குறித்த கூட்டத்தில் அவர் மேலும் கூறுகையில் -
எமது மக்களின் அரசியல், அபிவிருத்தி, அன்றாடப் பிரச்சினைகளுக்கு தீர்வை தரக்கூடிய ஒரு தலைவராக ரணில் விக்ரமசிங்கவே இருந்து வருகின்றார்.
இதேநேரம் தேசிய நல்லிணக்க வழிமுறையூடாக நடைமுறைச் சாத்தியமான தீர்வை எவ்வாறு பெற்றுக் கொள்ளவேண்டும் என்பதை நாமே தீர்மானிக்க வேண்டும்.
தமிழ் மக்களுக்கான அரசியல் பிரச்சினைக்குரிய தீர்வுக்கு ஆரம்பம் எவ்வாறானதாக இருக்க முடியும் என்று தொடர்ச்சியாக நாம் கூறிவருவதை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் சாதகமாக வெளிப்படுத்தியுள்ளார்
குறிப்பாக தமிழ் மக்களின் பிரதேசங்களை அபிவிருத்தியால் கட்டியெழுப்பவும் வாழும் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும் சிறந்த பொறிமுறைகளை ஜனாதிபதி ரணில் தனது விஞ்ஞாபனத்தில் உள்வாங்கியிருக்கின்றார்.
இதேநேரம் அதலபாதாளத்தில் வீழ்ந்து கிடந்த நாட்டுக்கும் தத்தளித்துக் கொண்டிருந்த மக்களுக்கும் மீட்சியை கொடுத்துள்ளார்.
குறிப்பாக நாட்டின் பொருளாதாரத்தை கடந்த இரண்டு வருடங்களில் தனது ஆற்றல்மிக்க தலைமைத்துவத்தினூடாக தூக்கி நிறுத்தியிருக்கின்றார்.
இவ்வாறான நிலையில் அந்த மயற்சிகளை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல அவருக்கு மேலும் ஒரு சந்தர்ப்பத்தை நாட்டு மக்கள் ஒன்றிணைந்து வழங்க வேண்டும் என கோருகின்றேன்.
இதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆற்றலையும் ஆழுமையையும் அருகில் இருந்து பார்த்து வரும் வகையில் இருப்பதை பாதுகாத்துக்கொண்டு நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கு அவரே தலைமை வகிக்க வேண்டும் என அவரது எரிவாயு சிலிண்டர் சின்னமே உங்கள் ஒவ்வொருவரது தெரிவாகவும் இருக்க வேண்டும்.
அதனூடாக அந்த வெற்றியில் தமிழ் மக்களும் முழுமையான பங்காளிகளாக இருக்க வேண்டும் என்பதை நான் உங்களிடம் வலியுறுத்துகின்றேன்.
இதேநேரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மக்களுக்கு கொடுக்கும் வாக்குறுதிகளுக்கும் நான் உங்கள் முன்னால் கூறியவற்றுக்கும் நாமே பொறுப்பாகவும் இருப்போம் என சுட்டிக்காட்டிய அமைச்சர் அரசியலுக்காகவோ அல்லது வாக்குக்காகவோ எதையும் நான் பேசுவதில்லை.
உங்களதும் நாட்டினதும் எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் வேலைத் திட்டங்களை அவர் செய்து காட்டியுள்ளார்.
இதேநேரம் மக்கள் நலன் சார்ந்தே எனது அனைத்து செற்பாடுகள் அமையும். அதனடிப்படையில் தமிழ் மக்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.
அந்த வகையில் எதிர்வரும் 21 ஆம் திகதியன்று உங்கள் ஒவ்வொரு வாக்கினூடாக எரிவாயு சிலிண்டர் சின்னத்தை வலுப்படுத்தி அந்த சந்தர்ப்பத்தை ரணில் விக்ரமசிங்கவுக்கு கொடுப்பதன் ஊடாகவும் அவரோடு நாம் ஒவ்வொருவரும் சேர்ந்து பயணிப்பதன் ஊடாகவும் எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளில் இருந்து விடுதலைபெற முடியும் என்றார்.