இலங்கையில் மாகாண சபைத் தேர்தலை நடத்தி தமிழ் மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கவும்.-- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இலங்கை அரசிடம் வலியுறுத்து
இலங்கையில் நீண்ட காலமாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாண சபைத் தேர்தல்களை மிக விரைவாக நடத்தி தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ்நாடு மாநிலப் பிரிவு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கேட்டிருக்கிறது.
இலங்கையில் நீண்ட காலமாக நடத்தப்படாமல் இருக்கும் மாகாண சபைத் தேர்தல்களை மிக விரைவாக நடத்தி தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியின் தமிழ்நாடு மாநிலப் பிரிவு இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கேட்டிருக்கிறது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில மகாநாட்டில் இது தொடர்பில் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
அந்த மகாநாடு ஜனவரி 3ஆம் திகதி தொடக்கம் 5ஆம் திகதி வரை விழுப்புரத்தில் கட்சியின் தேசிய மத்திய குழு உறுப்பினர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்றது.
மகாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக் குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ்காரத், பிருந்தாகாரத், எம்.ஏ. பேபி, ஜி. இராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் உட்பட மத்திய குழு, மாநிலச் செயற் குழு, மாநிலக்குழு ஆகியவற்றின் உறுப்பினர்களும் தமிழகம் முழுவதிலும் இருந்து
550க்கும் மேற்பட்ட பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
இலங்கை தொடர்பிலான தீர்மானத்தை பாராளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முன்மொழிய தமிழ் நாடு சட்டசபை உறுப்பினர் எம்.சின்னத்துரை வழிமொழிந்தார்.
"இலங்கை தமிழர்கள், இஸ்லாமியர்கள், மலையகத் தமிழர்கள் சமத்துவத்துடன் வாழவும் - மாகாணங்களுக்கான அதிகாரப் பரவலாக்கலை உறுதி செய்திடவும் கோரும் தீர்மானம்” என்ற தலைப்பிலான அந்த தீர்மானத்தில் கூறப்பட்டிருப்பதாவது-
இலங்கையில் தமிழ் மக்கள் சமத்துவமின்மைக்கும் நீண்டகாலமாக இன வெறித் தாக்குதலுக்கும் ஆளாகிவந்த நிலையில், அது உள்நாட்டு யுத்தத்துக்கும் அமைதியின்மைக்கும் வழிவகுத்தது.
அதனால் அனைத்துப் பகுதி மக்களும் பாதிக்கப்பட்டனர்.
தற்போது இலங்கைத் தமிழர்கள் உட்பட அனைத்து சிறுபான்மைச் சமூகங்களினதும் ஆதரவுபெற்ற தேசிய மக்கள் சக்தி அமோக பெரும்பான்மையுடன் ஆட்சிபீடத்தில் அமர்ந்திருக்கிறது.
இந்த சுமுகமான சூழ்நிலையைப் பயன்படுத்தி சமத்துவத்தையும் மாகாணங்களுக்கான அதிகாரப் பரவலாக்கலையும் உறுதிசெய்ய வேண்டும் என்று இந்த மகாநாடு கேட்டுக்கொள்கிறது.
நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருந்துவரும் மாகாணசபை தேர்தல்களை மிக விரைவாக நடத்தி மாகாண சபைகளுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவதன் மூலம் தமிழ் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்றும் மகாநாடு கேட்டுக்கொள்கிறது.
இலங்கை தமிழர்கள், இஸ்லாமியர்கள், மலையகத் தமிழர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் உரிய பேச்சுவார்த்தைகளை நடத்தி தீர்வுகளைக் காணவேண்டும்.
மாகாணங்களுக்கான அதிகாரப் பரவலாக்கத்தின்போது எந்தவிதமான கட்டுப்பாடுகளையும் விதிக்காமல் கல்வி, சுகாதாரம், வீட்டுவசதி, நிலம், காவல்துறை போன்ற அம்சங்களில் மாகாண அரசாங்கங்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்று இந்த மகாநாடு இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்கிறது.