காங்கிரஸ் மூத்த தலைவர் இளங்கோவனின் உடலுக்கு தலைவர்கள், காங்கிராஸ் தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி

3 weeks ago



காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி. கே.எஸ். இளங்கோவன் உடலுக்கு தலைவர்கள், காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

காங்கிரஸ் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ.வுமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் (வயது 76) சென்னையில் நேற்று சனிக்கிழமை காலமானார்.

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவு செய்தி அறிந்ததும் தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை மற்றும் கட்சி நிர்வாகிகள் மியாட்                        மருத்துவமனைக்கு விரைந்தனர்.

கட்சித் தொண்டர்களும், மக்களும் திரண்டனர். இளங்கோவன் மறைவு செய்தியறிந்து தொண்டர்கள் மிகுந்த வேதனையடைந்தனர்.

மருத்துவமனையில் இருந்து மணப்பாக்கத்தில் உள்ள இல்லத்துக்கு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல் எடுத்துச் செல்லப்பட்டு பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

அங்கு அவரது உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன், எம்.பி. தயாநிதி மாறன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தி தமிழக காங்கிரஸ் தலைவர் கு.செல்வபெருந்தகை, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கே.வி.தங்கபாலு, சு.திருநாவுக்கரசர் கிருஷ்ணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச்    செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கொம் யூனிஸ்டு கட்சி மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தேசியத் தலைவர் காதர் மொய்தீன், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு, அதிமுக முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் உள்ளிட்டோர் மாலை அணிவித்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.

காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர்      செல்வபெருந்தகை வெளியிட்ட அறிக்கையில், "ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ஒரு வாரம் துக்கம் அனுசரிப்பதோடு, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும்.

இன்று மாலை சுமார் 4.00 மணியளவில் முகலிவாக்கம் எல் அண்ட் டி காலனி பகுதியில் அமைந்துள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும்." என்று தெரிவித்துள்ளார்.

அண்மைய பதிவுகள்