பொதுத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களில் தேர்தல் கால செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 74 பேருக்கு எதிராக வழக்கு

3 months ago



கடந்த பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் தேசியப் பட்டியலுக்காக போட்டியிட்ட வேட்பாளர்களில் தேர்தல் கால செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 74 பேருக்கு எதிராக வழக்குத் தொடர தேர்தல்கள் ஆணைக் குழு தீர்மானித்துள்ளது.

தற்போது, வேட்பாளர் பட்டியல்களை பொலிஸாரிடம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மேலதிக தேர்தல் ஆணையாளர் சிந்தக குலரத்ன தெரிவித்தார்.

இதற்கு மேலதிகமாக, தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத 134 அரசியல் கட்சிகளுக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழு வழக்குத் தொடர தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் எண்ணிக்கை எண்ணூறுக்கும் மேல் என்பதால் அவர்கள் மீதும் தனித் தனியாக வழக்கு தொடரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்தந்த பொலிஸ் நிலையங்களினால் விசாரணைகள் மேற்கொண்டு, விசாரணைக் கோப்புகள் சட்ட நடவடிக்கைகளுக்காக சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் குலரத்ன கூறினார்.

அதேவேளை, செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறும் வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக அபராதம், சிறைத் தண்டனை அல்லது தேர்தல் நடவடிக்கைகளுக்கு தடை விதிப்பது போன்ற சட்ட நடவடிக்கை எடுக்கவும் சட்டத்தில் விதிகள் உள்ளதாக கூறப்படுகிறது.