உலகளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருளில் ஏற்பட்ட பாதிப்பு விபரம் வெளியானது.

5 months ago


உலகளவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருளில் ஏற்பட்ட பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது சைபர் தாக்குதல் இல்லை என விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த மேலும் விவரங்களை காணலாம். 

உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு 40 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர். அந்நிறுவனத்தின் விண்டோஸ் மென்பொருள்தான் உலகம் முழுவதும் ஏராளமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.

தற்போது மைக்ரோசாப்ட் விண்டோஸ் செயல்பாட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திடீரென்று பல்வேறு பயனர்களின் கணினி திரை நீல நிறமாக மாறி, ரீ-ஸ்டார்ட் ஆகி வருகிறது. இப்படியான சிக்கலுக்கு ப்ளூ ஸ்க்ரீன் ஆப் டெத் என்று பெயர். மேலும் மைக்ரோசாப்ட் 365, XBox, Outlook ஆகியவை செயலிழந்துள்ளது.

இலங்கை, இந்தியா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, உள்ளிட்ட பெரும்பாலான நாட்டில் வசித்து வருபவர்கள் இந்த பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். இதனால் உலக அளவில் வங்கி சேவை, விமான சேவை ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன.

விமானங்களை தரையிறங்குவது, விமானங்களின் செக்-இன் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இந்த பாதிப்புகெல்லாம் காரணம் Crowdstrike அப்டேட்தான் எனக் கூறப்படுகிறது.

CrowdStrike என்பது அமெரிக்காவில் உள்ள சைபர் செக்யூரிட்டி சாப்ட்வேர் நிறுவனமாகும். இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனம் மட்டுமின்றி பல முன்னணி நிறுவனங்களுக்கு இணைய பாதுகாப்பு சேவையை வழங்கி வருகிறது. இந்நிலையில் CrowdStrike மென்பொருளின் அப்டேட்தான் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மென்பொருள் பாதிப்புக்கு காரணம் என டெல் டெக்னாலஜிஸ் நிறுவனம் கூறுகிறது. CrowdStrike இன் ஃபால்கன் சென்சார் செயலிழந்து விண்டோஸ் சிஸ்டத்துடன் முரண்பட்டதால் தரமற்ற அப்டேட் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஒப்புக்கொண்ட நிறுவனம் இந்தச் சிக்கலைத் தீர்க்க எங்கள் பொறியாளர்கள் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றனர் என்றும், இதற்காக யாரும் சப்போர்ட் டிக்கெட்டை அணுக வேண்டாம் எனவும் கூறியுள்ளது. மேலும் பிரச்னை சரிசெய்யப்பட்டதும் பயனர்களுக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி இந்த பிரச்னைக்கு சைபர் தாக்குதல் காரணம் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.

சிக்கலை எவ்வாறு சரி செய்வது? – CrowdStrike-ன் Falcon சென்சருக்கான அப்டேட் காரணமாக இந்த எரர் ஏற்பட்டுள்ளது. எனினும் மற்றொரு அப்டேட் மூலம் இந்த சிக்கலை சரி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதன்படி, விண்டோஸ் 10-ல் தற்போது ஏற்பட்டுள்ள BSOD சிக்கலைச் சரிசெய்ய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.

1.விண்டோஸ் இயங்குதளத்தை ஷேப் மோட் (Safe Mode) அல்லது WRE மோடில் பூட் செய்யுங்கள்.

2.C:\Windows\System32\drivers\CrowdStrike-க்கு செல்லவும்.

3.”C-00000291*.sys” என்ற பைலை கண்டுபிடித்து, டெலிட் செய்யவும்.

4. இறுதியாக எப்போதும் போல் இயங்குதளத்தை பூட் செய்யவும்.