வெளிநாட்டலுவல்கள் அமைச்சு என்ற ரீதியில் ரஷ்ய இராணுவத்தில் இணைந்த இலங்கையர்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி வருகின்றோம்.
அவர்கள் உத்தியோகபூர்வமற்ற இராணுவத்தில் சட்டரீதியற்ற முறையில் இணைந்தமையால் இராஜதந்திர ரீதியில் இந்த விடயத்தை அணுகுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் நேற்றைய சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், முப்படைகளைச் சேர்ந்த முன்னாள் படையினர் தொழில் வாய்ப்புக்காக ரஷ்ய இராணுவத்தில் இணைந்துள்ளனர்.
இவ்வாறு இணைந்தவர்களில் பெரும்பாலானோர் காணாமல் போயுள்ளனர்.
இது தொடர்பில் இலங்கையிலுள்ள ரஷ்ய தூதுவரிடம் கலந்துரையாடி இணக்கப்பாடு எட்டப்பட்டுளளது.
அதற்கமைய இவ்வாறானவர்களை மீண்டும் ரஷ்ய இராணுவத்தில் இணைத்துக் கொள்ளாமல் இருப்பதற்கும் தற்போது காணாமல் போயுள்ளவர்கள் தொடர்பில் தகவல்களை ஆராய்ந்து வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
யுத்தத்தின்போது காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பது இலகுவான விடயமல்ல.
அங்கு தீவிர யுத்தம் நடைபெற்று வருகிறது.
எவ்வாறிருப்பினும், வெளிநாட்டலுவல்கள் அமைச்சு என்ற ரீதியில் நாம் இந்த விவகாரத்தில் அவதானம் செலுத்தி வருகின்றோம்.
ஆனால், முழுமையான தகவல்களை குறுகிய காலத்துக்குள் வழங்க முடியும் என்று எம்மால் கூறமுடியாது.
எனவே, முன்னர் ஆரம்பிக்கப்பட்ட நடவடிக்கைகளை அவ்வாறே முன்னெடுத்து செல்கின்றோம். அதற்கமைய இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர தொடர்புகள் ஊடாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்ட ரீதியாக ரஷ்ய இராணுவத்தில் இணைந்திருந்தால் அவர்களை இலகுவாக நாட்டுக்கு அழைத்து வர முடியும்.
ஆனால், இவர்கள் சட்டத்துக்கு முரணாக உத்தியோகபூர்வமற்ற இராணுவத்தில் இணைந்திருப்பதால் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது இலகுவானதல்ல - என்றார்.