திருக்கோணேஸ்வரம் கோயில் அருகில் கசிப்பு விற்பனை - அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் அகற்றுமாறு கோரிக்கை

6 months ago

திருகோணமலை, திருக்கோணேஸ்வரம் கோயில் அருகில் உத்தரவின்றி அமைக்கப்பட்ட பெட்டிக்கடையில் கசிப்பு விற்பனை சம்பவம் அறிந்து சைவ மக்கள் மிகுந்த கவலையடைந்துள்ளனர்.

இந்த விடயம் தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகில இலங்கை இந்து மாமன்றத்தின் உப தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு அவர் அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, திருகோணமலை, திருக்கோணேஸ்வரம் ஆலயம் அருகே பக்தர்கள் கோயில் வரும் பாதையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட பெட்டிக்கடையொன்றில் கசிப்பு குடிவகை விற்கப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டு ஒருவரைப் பொலிஸார் கைது செய்தனர் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த விடயம் சைவ மக்களுக்கு அதிர்ச்சியையும் கவலையையும் தரும் செய்தியாகும்.

சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கடைகளை அகற்றுமாறு சைவ நிறுவனங்கள் தொடர்ந்து வேண்டுதல் விடுத்த போதும் இதுவரை எவரும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. தங்களிடமும் இவ்விடம் தொடர்பாக முறையிட்ட போதும் இதுவரை பயன்கிட்டவில்லை.

புனிதமான வரலாற்றுத் தலம் அருகே இவ்வாறான சம்பவம் நடைபெறுவது அருவருக்கத்தக்க செயலாகும்.

தாங்கள் இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த உடன் பெட்டிக் கடைகளை நீக்க நடவடிக்கை எடுக்க முன்வரவேண்டும் என்றுள்ளது.