மே 29 ஈழத்து முதன்மைச் சித்தர்களில் ஒருவரான யோக சுவாமிகளின் 152வது ஐனன தினமாகும்.
இவர் 1872ம் ஆண்டு ஈழத்தின் வடபுலத்தில் அமைந்த மாவிட்டபுரத்தில் பிறந்தவர்.
அம்பலவாணர் - சின்னாச்சியம்மை தம்பதிக்கு, மே 29 1872இல் பிறந்தார்.
ஒரு சாதாரண விவசாயக் குடும்பத்தில் பிறந்த யோகசுவாமிகளின் இயற் பெயர் சதாசிவம். இளம் வயதிலேயே தாய் இறந்துவிட, தாயாரின் சகோதரி முத்துப்பிள்ளை அம்மையாரால் வளர்க்கப்பட்டார்.
கொழும்புத்துறையில் ஒரு கத்தோலிக்கப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் பின்னர் யாழ் சென்பற்றிக்ஸ் கல்லூரியில் மேற்படிப்பும் கற்றார்.
நீர்ப்பாசனத் திணைக்களத்தில் களஞ்சியக் காப்பாளராகப் பணியில் இணைந்து, கிளிநோச்சியில் இரணைமடுக் குளத்திட்டத்தில் பணிபுரிந்தார்.
1905இல் நல்லூர்த் தேரடியில், முதன்முதலாக செல்லப்பா சுவாமியைக் கண்டார். அன்றிலிருந்து இவர் வாழ்க்கை திசைமாறியது.
யாரடா நீ ?" என்று கேட்டு, "ஒரு பொல்லாப்பும் இல்லை!" என்ற வார்த்தைகளை செல்லப்பா சுவாமிகள் உதிர்த்த கணம், சதாசிவத்தின் மனம் லௌகிக வாழ்க்கையை உதறியதாகச் சொல்லப்படுகின்றது.
ஐந்து ஆண்டுகள் அவரிடம் சீடனாக வாழ்ந்த சதாசிவம், செல்லப்பரால் சன்னியாச தீட்சை அளிக்கப்பட்டு அனுப்பப்பட, கொழும்புத்துறையில் ஒரு இலுப்பை மரத்தடியில் அவர் யோக சாதனைகளில் திளைத்தார்.
பின் அங்கேயே ஆச்சிரமமொன்ற அமைத்த அவர், இலங்கையெங்கணும் யாத்திரை செல்வதும், நற்சிந்தனைகளை வழங்குவதுமாக இருந்தார்.
1940இல் இந்தியப் பயணம் மேற்கொண்ட அவர் திருவண்ணாமலை சென்று இரமண மகரிஷியைச் சந்தித்தார்.
1934 டிசம்பரில், அவரால் துவக்கப்பட்ட சிவதொண்டன் பல்லாண்டுகளாகத் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றது.
இவருக்குப் பல சீடர்கள் இருந்தனர்.
யோகர் சுவாமிகளின் நேரடிச் சீடர்களாக, மார்க்கண்டு சுவாமிகள், சந்த சுவாமிகள், செல்லத்துரை சுவாமிகள் ஆகியோர் சொல்லப்படுகின்றனர்.
இவர்களில் சந்தசுவாமி, இலங்கையின் கடைசி ஆங்கிலேய ஆளுநர் சோல்பரி பிரபுவின் மகன் ஆவார்.
ஹாவாய் சைவ ஆதினத்தில் 162ஆவது நந்திநாத பரம்பரை சற்குருவாக அமர்ந்திருந்திருந்த சிவாய சுப்பிரமணியசுவாமிகள் யோகர் சுவாமிகளது சீடரே!
இவர்களைவிட, கௌரிபாலா (யேர்மன் சுவாமி), பரிநரிக்குட்டி சுவாமி (அவுஸ்திரேலியா) ஆகியோரும் சுவாமிகளின் சீடர்கள் ஆவர்.
இவரது நான்கு மகா வாக்கியங்கள். இவை இவருக்கு இவரது குருவான செல்லப்பா சுவாமிகளால் போதிக்கப்பட்டது. யோகர் சுவாமிகளும் இறுதிவரை தனது தொண்டர்களுக்கு தொடர்ந்து போதித்து வந்தார்.
1. எப்பவோ முடிந்த காரியம்
2. நாம் அறியோம்
3. ஒரு பொல்லாப்பும் இல்லை
4. முழுதும் உண்மை
என்பவையே அவையாகும்.
யோகர் சுவாமிகள் பாடிய பாடல்கள், கவிதைகள், அருண்மொழிகள் என்பன, அவரது சீடர்களான மார்க்கண்டு சுவாமிகள், சந்த சுவாமி, செல்லத்துரை சுவாமி என்போரால் தொகுக்கப்பட்டு, தமிழில் "நற்சிந்தனை" எனும் நூலாகவும், ஆங்கிலத்தில் "The Words of Our Master" என்ற பெயரிலும் வெளியிடப்பட்டுள்ளன.
மார்ச் 24, 1964ஆம் ஆண்டு மாலை 3:30 மணியளவில் யோகசுவாமிகள் தனது 91வது வயதில் யாழ்ப்பாணம் சிவதொண்டன் நிலையத்தில் காலமானார்.
யோகர் சுவாமிகளின் ஐனன தினத்தில் அவர் அடி தொட்டு வணங்கி ஆசி வேண்டுகிறேன்.
மாவிட்டபுரம் தனில் உதித்து
மாபெரும் சாதனை புரிந்த
ஈழத்துச் சித்தர் யோகசுவாமியை
ஈந்த தினமிந்தத் தினமன்றோ
கொழும்புத்துறையில் அமர்ந்தவர்
கொடுத்த நற்சிந்தனைகள் பரவி
ஆன்மீக அறிவியலின் மத்தியின்
அங்கமென மிளிர்ந்து ஒளிருது
எப்பவோ முடிந்த காரியமென்று
எப்போதும் சும்மா இருவென்பார்
எவர்க்கும் பொல்லாப்பு இல்லையென
எளிமையாய்ப் பகிர்ந்திடுவார் எமக்கு
சதாசிவமாய் பிறப்பெடுத்த சித்தர்
சதாதினமும் சிவநாமம் பகன்றிட்டார்
சதாசிவத்துடன் ஒன்றியே வாழ்ந்தவர்
சதானந்த மூர்த்தியுடன் சங்கமித்தார்
யாழ்பாணத்துச் சித்தர் யோகர்
யாழ்ப்பாண மண்வாசம் காப்பார்
ஊழ்வினை அனைத்தும் அகன்றிட
உம்மருள் வேண்டுகிறேன் யோகரே
ஈசனடி இணைந்திட்ட யோகரவர்
ஈழத்தின் மாண்புமிகு சித்தரவர்
இறையருள் இதயத்தில் துலங்கிட
இவர்புகழ் என்றென்றும் ஓங்கிடும்
நூறோடு ஐம்பத்தி இரண்டின்று
நானிலத்தில் ஓடியே போயினும்
நல்லினியோர் மனங்களில் என்றும்
நிலைத்திடும் யோகரிவர் நற்சிந்தனை
வணக்கத்துடன்
சக்தி சக்திதாசன்