இலங்கையின் சொற்பொழிவாளர்களில் ஒருவரும், தமிழறிஞருமான தமிழருவி த.சிவகுமாரன் இம்மாதம் 22,23 ஆம் திகதிகளில் லண்டனில் நடைபெறும் உலக சைவ மாநாட்டில் இலங்கையின் பிரதிநிதியாகக் கலந்துகொள்ளவுள்ளார்.
பிரித்தானிய சைவத்திருக்கோவில்கள் ஒன்றியம் நடத்தும் 23 ஆவது உலக சைவமாநாட்டின் முதல்நாள் நிகழ்வுகள் லண்டன் விம்பிள்டன் ஸ்ரீ கணபதி கோவில் மாநாட்டு மண்டபத்திலும், இரண்டாம் நாள் நிகழ்வுகள் லண்டன் லூசியம் சிவன்கோவில் மண்டபத்திலும் இடம்பெறவுள்ளன.
'சைவமும் தமிழிசையும்' என்னும் தொனிப்பொருளில் நடைபெறவுள்ள மாநாட்டில் தமிழகம், மலேசியா, கனடா, பிரான்ஸ், சுவிற்ஸர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து மகா சந்நிதானங்களும் அறிஞர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
சைவ ஆலயப் பயன்பாட்டில் தமிழிசை', 'இளைஞர்கள் மத்தியில் தமிழிசை' என்னும் பொருள்களில் முறையே இரு தினங்களும் பேருரைகளை ஆற்றவுள்ள தமிழருவி த.சிவகுமாரன், முதல்நாள் மாநாட்டில் நடைபெறவுள்ள,
'இடம் பெயர்ந்தும் புலம்பெயர்ந்தும் எம் தமிழ் மக்களுக்கு நன்மைகளைப் புரிந்திருக்கிறதா? அல்லது தீமைகளைப் புரிந்திருக்கிறதா?' என்னும் தலைப்பிலான பட்டிமன்றத்துக்குத் தலைமை தாங்கவுள்ளார். தொடர்ந்து, லண்டனில் இடம் பெறவுள்ள விழாக்கள், நிகழ்வுகள். ஆலய உற்சவங்களில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார்.