ஜ.நா தீர்மானத்தில் தகுந்த தரமுயர்த்தல் மக்களின் எதிர்பார்ப்பு, நாடுகளிடம் வேண்டுவதாக எம்.பி சிறீதரன் தெரிவிப்பு

2 weeks ago



ஜ.நா தீர்மானத்தில் தகுந்த தரமுயர்த்தல் மக்களின் எதிர்பார்ப்பு.நாடுகளிடம் வேண்டுவதாக எம்.பி சிறீதரன் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை அரசுக்கு இனியும் கால நீடிப்பும் அரசியல் வெளியும் வழங்காது, குற்றவியல் பொறுப்புக் கூறல் தொடர்பான சர்வதேச விசாரணையை நோக்கி அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் விதத்தில் அடுத்த தீர்மானத்தில் தகுந்த தரமுயர்த்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது எமது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இலங்கை தொடர்பான மையக் குழு நாடுகளிடம் இந்தத் தரமுயர்த்தலை வேண்டுவதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்றக் குழுக்களின் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கனடிய வெளிவிகார அமைச்சின் இந்தோ - பசுபிக் பிராந்தியங்களுக்கான பிரதி அமைச்சர் வெல்டன் எப் உள்ளிட்ட கனடிய அரசியல் தரப்பினருடனான உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று வியாழக்கிழமை ஒட்டாவாவில் உள்ள அமைச்சு அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன்போதே அவர்              மேற்கண்டவாறு தெரிவித்ததோடு கோரிக்கை கடிதமொன்றையும் கையளித்துள்ளார்.

அக்கடித்தில், ஈழத்தமிழர் மீது திட்டமிடப்பட்ட தொடர்ச்சியான இன அழிப்பு இலங்கைத் தீவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று பாராளுமன்றக் குழுத் தலைவராக நான் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழர்களின் பிரதான கட்சியான தமிழரசுக் கட்சி 1956 ஆம் ஆண்டில் நிறைவேற்றிய திருகோணமலைப் பிரகடனத்தில் எவ்வாறு இந்தத் திட்டமிடப்பட்ட இன அழிப்பை இலங்கை அரசு கட்டமைப்பு ரீதியாக மேற்கொள்ள ஆரம்பித்துள்ளதென்பதை ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவரான மறைந்த தந்தை செல்வா ஆரம்பத்திலேயே தெளிவாக விளக்கியிருந்தார்.

அதன் ஒரு வடிவமாகவே ஒற்றையாட்சி அரசியலமைப்பு தொழிற்படுகிறதென்று சர்வதேச தரப்புகளை நோக்கி இலங்கை எதிர்நோக்கும் சிக்கல் என்ற வெளியீட்டை முதல் முதலாக சர்வதேசம் நோக்கி தமிழரசுக் கட்சி முன் வைத்திருந்தது.

இது தொடர்பில் அன்று தொட்டு இன்று வரை சர்வதேசத்தின் பங்கை மக்கள் பிரதிநிதிகளாக நாம் வலியுறுத்தி வருகிறோம்.

இலங்கைத் தீவு தொடர்பான பொறுப்புக்கூறல் அர்த்தமுள்ளதாகுவதெனில் அதைப் பின்வரும் மூன்று விதமாகப் படிநிலைப்படுத்தப்பட்ட முக்கியத்துவத்தோடும் ஒழுங்கோடும் அணுக வேண்டும் என்பது எமது பார்வையாக உள்ளது:

1) தலையாய சர்வதேசக் குற்றமான இன அழிப்புத் தொடர்பான பொறுப்புக் கூறல்.

2)இதர சர்வதேசக் குற்றங்களான போர்க் குற்றங்கள், மனிதத்துவத்துக்கு எதிரான குற்றங்கள், சித்திரவதை, வலிந்து காணாமலாக்கப்பட்டமை ஆகியவை பற்றிய பொறுப்புக்கூறல்.

3) மேற்குறித்த குற்றங்கள் மீள்நிகழாமையை உறுதிப்படுத்தும் வகையில் பல பத்தாண்டுகளாகத் தீர்க்கப்படாது புரையோடிப் போயிருக்கும் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை, குறிப்பாகத் தமிழ் பேசும் மக்களின் தனித்துவமான சுயநிர்ணய உரிமையை உறுதிப்படுத்தும் கூட்டாட்சி அரசியலமைப்பொன்றை ஏற்படுத்துவதும் பொறுப்புக் கூறலின் முக்கிய பெறுபேறாக அமைய வேண்டும்.

மேற்குறித்த மூன்று முனைகளில் அர்த்தமுள்ள வகையில் பொறுப்புக் கூறலை முன்னெடுப்பதிலும் மீள் நிகழாமையை உறுதிப்படுத்துவதிலும் பெருந் தொகையாகப் புலம்பெயர்ந்து ஈழத்தமிழர்கள் வாழும் நாடுகளில் முதன்மையான நாடான கனடா நாடானது பின்வரும் வழிகளில் காத்திரமாக உதவ வேண்டும் என்று அனைத்து ஈழத்தமிழர் மற்றும் தமிழ் பேசும் மக்கள் சார்பாகவும் வேண்டி நிற்கிறேன்-என்றுள்ளது.