மட்டக்களப்பு கல்முனை மாநகர சபைக்கு எதிராக மனித உரிமை மீறல் மனுவை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளதாக ஷஃபி எச். இஸ்மாயில் தெரிவிப்பு
மட்டக்களப்பு கல்முனை மாநகர சபைக்கு எதிராக மனித உரிமை மீறல் மனுவை கல்முனை மேல் நீதிமன்றத்தில் தமது அமைப்பு தாக்கல் செய்துள்ளதாக இலங்கை நீதிக்கான மையத்தின் தலைவர் ஷஃபி எச். இஸ்மாயில் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
கல்முனை மாநகர சபை எல்லைக்குள் புதிதாக தண்ணீர் வழங்கல் இணைப்புக்காக தோண்டப்படுகின்ற கொங்கிறீட் வீதிகள் இன்னும் செப்பனிடப்படவில்லை.
இதனால், மக்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனை சுட்டிக்காட்டி எமது அமைப்பு மாநகர சபை ஆணையாளருக்கு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருந்தது.
இதற்கு கல்முனை மாநகர சபை நிர்வாகம் பொறுப்பற்ற - கண்துடைப்பான பதிலை வழங்கியது.
இந்தப் பதிலை ஏற்றுக்கொள்ளாமல் மாநகர சபைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளோம்.
இந்த வழக்கில் மையத்தின் பொதுச் செயலாளர் கலாநிதி றியாத் ஏ.மஜீத், பிரதித் தலைவர் யூ.கே.எம்.றின்சான் ஆகியோரும் முன்னிலையாகியிருந்தனர்.
புதிதாக தண்ணீர இணைப்பை பெறும் விண்ணப்பதாரர்கள், இந்தப் பணிக்காக வீதி தோண்டப்படுவதை சரி செய்வதற்கான கட்டணத்தை செலுத்திய பின்னரே தண்ணீர் இணைப்பு வழங்கப்படுகிறது.
ஆனால், தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்ட பின்னரும் பல இடங்களில் வீதி செப்பனிடப்படவில்லை.
இது மாநகர சபை கட்டளை சட்டத்தை மீறும் செயல்பாடாகும்.
மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் 46 மற்றும் 47 ஆவது பிரிவின்படி, வீதிகளை நிர்மாணிப்பதும் பராமரிப்பதும் மாநகர சபையின் அடிப்படைப் பொறுப்புகளாகும்.
இந்த அடிப்படை கடமைகளை நிறைவேற்றத் தவறுவது, மாநகர சபையின் சேவைத் தன்மையை கடுமையான கேள்விக்குட்படுத்துகிறது.
ஒரு குறிப்பிட்ட சேவையை வழங்கவென நிதி அறவிடப்பட்டு பின்னர் சேவையை வழங்காதிருப்பது ஒரு நிதி மோசடியாகும்.
மக்களிடம் அறவிடப்பட்ட நிதிக்கு என்ன நடந்துள்ளது? என சந்தேகம் எழுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த அடிப்படையிலேயே கல்முனை மாநகர சபைக்கு எதிராக மாகாண மேல் நீதிமன்றத்தில் மனித உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறான வழக்குப் பதிவு செய்யப்படுவது இதுவே முதல் தடவை - என்றும் கூறினார்.