இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் கோவிலான் கலங்கரை விளக்க கடற்பரப்பில் கடற்படையினரும் கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினரும் இணைந்து மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே குறித்த மீனவர்களும் படகும் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட இந்திய மீன்பிடி படகு மற்றும் படகில் இருந்த நான்கு இந்திய மீனவர்களும் காங்கசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகர் காரியாலயத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.
இதேவேளை, கிளிநொச்சி பிரதேசத்தில் 70 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, கேரள கஞ்சாவை ஏற்றிச் சென்ற டிங்கி படகுடன் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
டிங்கி படகில் இருந்த 176 கிலோவுக்கும் அதிகமான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
86 பொதிகளில் அடைக்கப்பட்ட 176 கிலோ 350 கிராம் கேரள கஞ்சா டிங்கி படகில் இருந்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்கள் 22 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், மன்னார் மற்றும் வாழைப்படு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள், கேரள கஞ்சா மற்றும் டிங்கி படகும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ஜயபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.