நிதி ஒதுக்கீடு செய்தோ, வெளிநாட்டு உதவிகளில் வடக்கு - கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்யுங்கள்”-- பொ.கஜேந்திரகுமார் வலியுறுத்து

3 weeks ago




"வடக்கு - கிழக்கு மாகாணங்கள் போரால் பாதிக்கப்பட்ட மாகாணங்கள். எனவே, அவற்றுக்கு என்று விசேட திட்டத்தை வகுத்து நிதி ஒதுக்கீடு செய்தோ, வெளிநாட்டு உதவிகள் பெற்றோ வடக்கு - கிழக்கு மாகாணங்களை அபிவிருத்தி செய்யுங்கள்”- என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் மேற் கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

"போரால் பாதிக்கப்பட்ட மாகாணங்களாக வடக்கு - கிழக்கு மாகாணங்கள் இருப்பதால் அவற்றை அபிவிருத்தி செய்வதற்கு விசேட நிதி ஒதுக்கீடு தேவை.

எனவே, அரசாங்க நிதியிலோ அல்லது வெளிநாடுகளின் நிதி உதவிகளைப் பெற்றோ விசேட திட்டங்களை அமைத்து அபிவிருத்திகளை செய்ய வேண்டும்.

ஏனைய மாகாணங்களைப் போன்று இங்கும் அவ்வாறு செய்வதால் முன்னேற முடியாது.

மேலும், கடந்த காலத்தில் யாழ். நகரத்தில் பல திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதும் யாழ். மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம் பிரதேச செயலகம், யாழ். மாநகர சபைகளின் எந்தவிதமான அபிப்பிராயங்களையும் கேட்காது திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இது கடந்த கால அரசாங்கத்துக்கும் அதிலிருந்தவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது. அதற்கான சகல திட்டங்களும் கொழும்பில் தான் மேற்கொள்ளப்பட்டன.

இந்தத் திட்டங்கள் மனிதனால் செய்யப்பட்ட அனர்த்தம். இதனால்தான் இந்த வெள்ள அனர்த்தம் ஏற்பட்டது.

இவ்வாறான திட்டங்கள் இனியும் மேற்கொள்ளாது மக்களின் தேவைகளுக்கு ஏற்ப விசேட திட்டங்களை வடக்கு - கிழக்கு மாகாணங்களுக்கு உருவாக்கி முன்னோக்கிச் செல்ல வேண்டும்.

கடற்றொழில் அமைச்சராக         உள்ளமையால் அமைச்சரவையிலும் இந்த விடயத்தை பேசி அதற்கான திட்டத்தை ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் சந்திரசேகர் உருவாக்க வேண்டும்" என்றார்.

அண்மைய பதிவுகள்