வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட குற்றச்சாட்டில் 3 வேட்பாளர்களின் வாகனங்கள் தடுத்து வைப்பு
வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட குற்றச்சாட்டில் சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் உட்பட 3 வேட்பாளர்களின் வாகனங்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அந்த வாகனங்களின் சாரதிகளும் கைது செய்யப்பட்டனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
வேட்பாளரின் உருவப்படம் மற்றும் ஸ்ரிக்கர் பொறித்த வாகனங்களில் வேட்பாளர்கள் பயணிக்க முடியும். வேட்பாளரின்றி அவருடைய உருவப்படம் அல்லது ஸ்ரிக்கர் பொறித்த வாகனங்கள் பயணிப்பதற்கு தேர்தல் திணைக்களம் தடை விதித்துள்ளது.
இந்த விதிமுறையை மீறி வவுனியாவில் வேட்பாளரின்றி வேட்பாளரின் ஸ்ரிக்கர்களுடன் நடமாடிய மூன்று வாகனங்களே வவுனியா பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், அவற்றின் சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளன.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ப. சத்தியலிங்கம், ஐக்கிய மக்கள் கூட்டணியின் வன்னி மாவட்ட வேட்பாளர் ரசிக்கா பிரியதர்சினி, ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்பாளர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் படம் பொறித்த வாகனங்களே இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளன.
வாகனங்களின் சாரதிகளை நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.