மணலாறில் 4 ஆயிரத்து 238 சிங்கள குடும்பங்கள் அடாத்தாக குடியேற்றம் - வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவிப்பு
முல்லைத்தீவு மாவட்டத்தின் மணலாறு பிரதேசம் வெலி ஓயாவாக மாற்றம் செய்யப்பட்டு தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்து 4 ஆயிரத்து 238 சிங்கள குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால் 3 ஆயிரத்து 389 தமிழ் குடும்பங்களுக்கு காணி இல்லை என வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.
முல்லைத்தீவில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.
வடமாகாணத்தில் 2 ஆயிரத்து 415 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்புள்ள மாவட்டம் முல்லைத்தீவு மாவட்டம்.
கிட்டத்தட்ட 5 இலட்சத்து தொண்ணூறாயிரம் ஏக்கர் நிலப்பரப்பை கொண்டதாக கணிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 3 ஆயிரத்து 389 குடும்பங்களுக்கு காணி இல்லை.
ஏற்கனவே விடுதலைப்புலிகள் மௌனிக்கப்பட்ட காலத்துக்குப் பின்னர் பூர்விகமான மணலாறு பிரதேசத்தை வெலிஓயாவாக மாற்றம் செய்து 4 ஆயிரத்து 238 சிங்கள குடும்பங்களுக்கு காணி வழங்கி வீட்டு வசதியும் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார்கள்.
தமிழ் மக்களுடைய பூர்வீக காணிகளை அபகரித்தே வழங்கியிருக்கிறார்கள்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 47 ஆயிரத்து 455 மொத்த குடும்பங்கள் உள்ள நிலையில் மக்கள் தொகை ஒரு இலட்சத்து 40 ஆயிரத்து 931 ஆகக் காணப்படுகின்றது.
இவர்கள் தமிழர்களின் பூர்வீக இடங்களில் 4 ஆயிரத்து 557 குடியமர்த்தப்பட்ட சிங்கள குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 545 பேரும், முஸ்லிம் மக்களாக 1675 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 382 பேரும் தமிழ் மக்களாக 41 ஆயிரத்து 210 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 21 ஆயிரத்து 799 பேரும் இந்தியத் தமிழ் மற்றும் பறங்கிய 13 குடும்பங்களைச் சேர்ந்த 205 பேருமாக காணப்படுகிறார்கள்.
குறிப்பிட்டு கூறக்கூடிய விடயம் என்னவெனில் தமிழ் மக்களுக்கு சொந்தமாக இருந்த பூர்வீகமான நீர்ப்பாசன குளங்கள் அதனோடு சேர்ந்த காணிகள் அனைத்தும் அபகரிக்கப்பட்டு 4557குடும்பங்களில் பல குடும்பங்களுக்கு வழங்கப்பட்டிருக்கின்றது.
ஆமையன்குளம், முந்திரிகைகுளம், மறிச்சுக்கட்டி குளம் ஆகிய குளங்களையும் அதனோடு இணைந்த நிலப்பரப்புகளையும் அபகரித்தே சிங்கள மக்களுக்கு வழங்கி தமிழ் மக்கள் தமது சொந்த நிலங்களையும், குளங்களையும் ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருக்கும் நிலமையை ஆட்சியாளர்கள் கொக்குத்தொடுவாய் கொக்குளாய், கருநாட்டுக் கேணி மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளார்கள்.
இதுதவிர 2022 ஆம் ஆண்டு காலப் பகுதியில் 28 ஆயிரத்து 676 இளைஞர், யுவதிகள் தமக்கு ஒரு ஏக்கர் காணி வீதம் தருமாறு விண்ணப்பம் செய்துள்ளனர்.
அரசாங்கமே விண்ணப்பிக்குமாறு அறிவித்தல் வழங்கியிருந்தது.
ஆனால் இன்று வரைக்கும் அவர்களுக்கு எதுவித காணிகளும் வழங்கப்படவில்லை. அதற்கான முயற்சிகளும் நடக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.