சஜித் பிரேமதாஸவுக்கு சுமந்திரன் அணி ஆதரவு அறிவித்தமையை அலட்டிக் கொள்ள தேவையில்லை - எம்.பி விக்கினேஸ்வரன் தெரிவிப்பு.

4 months ago


சுமந்திரனைத் தோற்கடித்த சிறீதரன் வெளிநாட்டில் உள்ள நிலையில் சஜித் பிரேமதாஸவுக்கு சுமந்திரன் அணி ஆதரவு அறிவித்தமையை அலட்டிக் கொள்ள தேவையில்லை என தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

சங்குச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்ப் பொது வேட்பாளர் அரியநேத்திரனை ஆதரித்து நேற்று வெள்ளிக்கிழமை யாழ் நகரப் பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார நடவடிக்கையின் போது ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் - தமிழரசுக் கட்சியின் சிலர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு வழங்கப்போகிறார்கள் என அண்மையில் அறிவிப்பு வெளியானது.

தமிழரசு கட்சியின் முக்கிய நபர்கள் கலந்து கொள்ளாமல் சுமந்திரன் அணி சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவு தெரிவித்து வெளியான அறிவிப்பு தொடர்பில் தமிழ் மக்கள் அலட்டிக் கொள்ளத் தேவையில்லை.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களிக்க உள்ள நிலையில் சஜித் பிரேமதாஸ வுக்கு சுமந்திரன் அணி வாக்களிக்குமாறு கூறியதை தமிழரசு கட்சி கூறியதாக எடுத்துவிட முடியாது.

தமிழ் மக்களை ஆட்சிக்கு மாறி மாறி வந்த எந்த ஒரு சிங்கள அரசாங்க மும் தமிழ் மக்களுக்கு ஏற்ற தீர்வினை வழங்காத நிலையில் இம்முறை ஜனாதிபதி வேட்பாளராக தமிழரை ஒருவரை நிறுத்த வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

தமிழ் பொது வேட்பாளர் தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது அனைவருக்கும் தெரிந்த விடயம். இருந்தாலும் தமிழ் மக்களை ஒன்றிணைக்க கூடிய வேட்பாளராக காணப்படுகிறார்.

ஆகவே தமிழ் மக்களின் எதிர்ப் பார்ப்பினை வலியுறுத்தும் தமிழ் பொது வேட்பாளருக்கு தமிழ் மக்கள் தமிழர்களாக சிந்தித்து வாக்களிப்பார்கள் என நம்புகி றேன்.- என அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மைய பதிவுகள்