தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் மாணவரிடையே வீட்டுத்தோட்டத்தை ஊக்குவிப்பதற்கு ‘மாணாக்க உழவர்’ எனும் வீட்டுத்தோட்டப் போட்டிக்கான முதற் கட்ட நிகழ்வு

2 months ago


தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே வீட்டுத்தோட்டச் செய்கையை ஊக்குவிக்கும் நோக்கில் ‘மாணாக்க உழவர்’ எனும் வீட்டுத்தோட்டப் போட்டியை நடாத்தி வருகின்றது.

இந்த ஆண்டுக்கான போட்டிக்குரிய விதைப்பொதிகளையும் செயன்முறை விளக்கங்களையும் மாணவர்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நேற்று வியாழக்கிழமை (10.10.2024) தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர்                  பொ. ஐங்கரநேசன் மாணாக்க உழவர் போட்டியில் கலந்து கொள்ள விண்ணப்பித்த மாணவர்களுக்கு விதைப் பொதிகளையும் நாற்றுகளையும் வழங்கி வைத்துச் செயன்முறை விளக்கங்களையும் அளித்தார்.

போட்டியில் பங்கேற்கும் மாணவர்கள் இவ்வருட இறுதியில் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவதோடு, மதிப்பீட்டு குழுவினர் வீட்டுத்தோட்டங்களையும் நேரடியாகப் பார்வையுற்று பரிசுக்குரியவர்களைத் தெரிவுசெய்யவுள்ளார்கள்.

பங்கேற்கும் அனைவருக்கும் மாணாக்க உழவர் சான்றிதழ்களும், மதிப்பீட்டின் அடிப்படையில் சிறந்த செய்கையாளர்களுக்கு விசேட பரிசுகளும் வழங்கப்படவுள்ளன.

பரிசளிப்பு நிகழச்சி 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவுள்ள பசுமை அமைதி விருதுகள் விழாவில் வழங்கப்படுமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம் நாட்டில் நிலவுகின்ற பொருளாதார நெருக்கடி, உணவுக்கான நெருக்கடி, இயற்கைப் பசளைகளின் மூலம் நஞ்சற்ற உணவு உற்பத்தி, பாரம்பரிய விதைகளின் பாதுகாப்பு, மாணவர்கள் தங்கள் ஓய்வு நேரங்களை பயனுள்ளதாக் கழிக்க வேண்டிய அவசியம் ஆகிய பல காரணங்களைக் கருத்தில் கொண்டே மாணாக்க உழவர் என்னும் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்