சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் வீதி புனரமைப்பில் ஊழல் முறைகேடு தொடர்பில் செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர் முகேஷ் சந்திரகர் படுகொலை
இந்தியா சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் ரூ.120 கோடி மதிப்பில் சாலை அமைக்கும் பணியில் ஊழல் முறைகேடு நடந்திருப்பதாக பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர் ஆதாரத்தோடு அம்பலப்படுத்தி இருந்தார்.
மேலும், அதில் சாலை கட்டுமானப்பணி ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் மீது ஊழல் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, மாநில பொதுப்பணித் துறை இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
இந்த நிலையில் இந்த செய்தியினை சேகரித்த பத்திரிகையாளர் முகேஷ் சந்திரகர் கடந்த 01ஆம் திகதி இரவில் திடீரென காணாமல் போனார்.
இவரை எங்குத் தேடியும் கிடைக்காததால் அவரது உறவினர்கள் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
புகாரில், முகேஷ் கடைசியாக, சுரேஷ் சந்திரகரின் சகோதரர் அழைத்தன் பேரில் சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திய பொலிஸார், கடந்த 3 ஆம் திகதி பீஜப்பூரின் சட்டன்பரா பஸ்தியில் இருக்கும் ஒப்பந்ததாரர் சுரேஷ் சந்திரகர் வீட்டில் இருக்கும் கழிவுநீர் தொட்டியிலிருந்து முகேஷ் சந்திரகரின் சடலத்தை மீட்டனர்.
இது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.