கொழும்பு குடியிருப்பில் 67 ஆவது மாடியில் இருந்து குதித்து இரு மாணவர்கள் தற்கொலை

6 months ago

கொழும்பு - கொம்பனி வீதியில் உள்ள பிரபல அடுக்குமாடி குடியிருப்பில் 67 ஆவது மாடியில் இருந்து 15 வயதான இரண்டு மாணவர்கள் கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இந்தச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றது. சர்வதேச பாடசாலை ஒன்றில் ஒரே வகுப்பில் கல்வி கற்கும் மாணவனும், மாணவியுமே உயிர்மாய்த்தனர் என்று பொலிஸார் குறிப்பிட்டனர். வெள்ளவத்தை மற்றும் களனி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களே இவ்வாறு உயிரிழந்தனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பாடசாலை நேரம் முடிந்ததும் குறித்த கட்டடத்தில் நடைபெற்ற விருந்தில் இருவரும் கலந்துகொண்டனர் என்றும், இந்த விருந்தில் சுமார் 100 மாணவர்கள் கலந்துகொண்டனர் என்றும், அதன் பின்னர் மேற்படி இரு மாணவர்களும் 67 ஆவது மாடியில் இருந்து குதித்தனர் என்றும் பொலிஸ் விசாரணையில் தெரியவந்தது.

3 ஆவது மாடியில் மேல் தளத்தில் இருந்து அவர்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்றும், அவர்களின் காலணிகள் 67 ஆவது மாடியில் இருந்து மீட்கப்பட்டன என்றும் பொலிஸார் கூறினர்.

நீதிவானின் கள விசாரணையை அடுத்து சடலங்கள் பிரேத பரிசோதனைக்காகக் கொழும்பு தேசிய வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேற்படி மாணவனும், மாணவியும் தற்கொலை செய்தமைக்கான காரணம் இன்னமும் தெரியவரவில்லை.