இலங்கையில் நுண்நிதிக்கடனால் சுமார் 200 பெண்கள் உயிர்களை மாய்த்தனர்.-- தேசிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி ஹாஷினி சில்வா தெரிவிப்பு

1 day ago



இலங்கையில் கடந்த சில வருடங்களில் நுண்நிதிக்கடன் வலையில் சிக்கிய சுமார் 200 பெண்கள் தங்களது உயிர்களை மாய்த்துக் கொண்டுள்ளனர் என்று தேசிய மகளிர் ஒன்றியத்தின் தலைவி ஹாஷினி சில்வா தெரிவித்துள்ளார் .

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

இலங்கையில் 28 இலட்சம் பேர் நுண்நிதிக்கடன் பெறுகின்றனர். அவர்களில் 24 இலட்சம் பேர் பெண்களாவர்.

நுண்நிதி நிறுவனங்கள் 38 தொடக்கம் 40 சதவீதம் வரை அதிக வட்டிக்குக் கடன்களை வழங்குகின்றன.

கடனைச் செலுத்த முடியாத சில பெண்கள் அந்த நிறுவனங்களின் பிரதிநிதிகளால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகின்றனர்.

நுண்நிதிக்கடன் பிரச்சினையால் கிராமப் புறங்களில் உள்ள பெண்கள் கடுமையான பொருளாதார அழுத்தத்தைச் சந்திக்கின்றனர்.

அவர்களில் பலர் வருமானம் ஈட்டும் வாய்ப்புகள் இல்லாமலும், பதிவுசெய்யப்பட்ட வங்கிகளில் கடன்பெற முடியாதவாறும் நுண்நிதி நிறுவனங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிறுவனங்கள் வாரத்துக்கு 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிக வட்டி வீதங்களுடன் கடனை வசூலிக்கின்றன.

நுண்கடன் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் சட்டத்தை அரசாங்கம் கொண்டு வந்துள்ள போதிலும், அது இன்னும் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை-என்றார்.



அண்மைய பதிவுகள்