ஹமாஸ் அழிக்கப்படும் வரை காஸாவில் போர் தொடரும் - இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவிப்பு
ஹமாஸ் அமைப்பினர் அழித்து ஒழிக்கப்படும் வரை காஸாவில் போர் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் அதனை நிராகரித்து இஸ்ரேல் பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
காஸா மீதான இஸ்ரேலின் போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், கடந்த மே 26 ஆம் திகதி அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் சிறுவர்கள், பெண்கள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து உலக நாடுகளின் கவனம் ரபாவின் பக்கம் திரும்பியது. அண்மையில், ஸ்பெயின், அயர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் கூட்டாக பலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்தன.
இருப்பினும் நாளுக்கு நாள் மோதல்கள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில் காஸாவில் நிரந்தர அமைதியை ஏற்படுத்தும் முகமாக புதிய திட்டம் ஒன்றை இஸ்ரேல் முன்மொழிந்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்தார்.
அத்தோடு, இஸ்ரேல் முன் மொழிந்துள்ள திட்டத்தின் படி, ஆறு வார காலத்துக்குள் படிப்படியாக மக்கள் அதிகமாகவுள்ள இடத்திலிருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறும் என்றும் போரை முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை ஏற்படுத்துவதற்கான இந்த வாய்ப்பை தவற விட்டு விடக்கூடாது என்றும் பணயக் கைதிகள் வெளியேற்றம் குறித்தும் ஹமாஸ் இந்த முன்மொழிவை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாரு, காஸாவில் நீடிக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இஸ்ரேலின் நிபந்தனைகள் மாறவில்லை.
ஹமாஸின் இராணுவத்தை அழிப்பது அனைத்துப் பணயக் கைதிகளையும் விடுவிப்பது மற்றும் காஸா இனி இஸ்ரேலுக்கு எந்த விதத்திலும் அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதி செய்தல் போன்றவற்றை அழுத்தமாக வலியுறுத்தியுள்ளார்.
இதனிடையே உடனடி போர் நிறுத்தத்துக்கு கனடா அழைப்பு விடுப்பதாக அந்த நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
உடனடி போர் நிறுத்தம், தடையில்லா மனிதாபிமான உதவிகளை அவசரமாக அதிகரிப்பது, மற்றும் பணயக்கைதிகள் அனைவரையும் விடுவிக்க கனடா அழைப்பு விடுத்துள்ளது என்று எக்ஸ் வலைத்தள பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் துயரத்தை முடிவுக்குக் கொண்டுவர ஜோ பைடனால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவு ஒரு வாய்ப்பாகும்.
மேலும் அமைதிக்கான பாதைக்குத் திரும்ப வேண்டும் எனவும் ஜஸ்டின் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.