யாழ்.தையிட்டியில் கட்டப்பட்ட விகாரைக்கு மாற்றுக் காணிகள் வழங்க வேண்டும் என்று கூறுபவர்கள் அரசின் அடிவருடிகளே -- எம்.பி பொ.கஜேந்திரகுமார் தெரிவிப்பு

2 months ago



இலங்கையில் சட்டவிரோதமாக அனுமதியின்றிக் கட்டப்பட்ட மத வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டிருக்கின்றன. அவ்வாறிருக்க தையிட்டியில் கட்டப்பட்ட விகாரைக்கு மாற்றுக் காணிகள் வழங்க வேண்டும் என்று கூறுபவர்கள் அரசாங்கத்தின் அடிவருடிகளே என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார் .

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கொழும்பில் அனுமதியின்றிக் கட்டப்பட்டது என்று கூறி இஸ்லாமியப் பள்ளிவாசல் இடிக்கப்பட்டிருக்கின்றது.

இலங்கையில் சட்ட விரோதமாக அனுமதியின்றிக் கட்டப்பட்ட மத வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டிருக்கின்றன.

ஆனால் அரசாங்கத்தின் அடிவருடிகளாகச் செயற்படுவோர் தையிட்டியில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட விகாரையால் காணியை இழந்த மக்களுக்கு மாற்றுக் காணிகள் வழங்கலாம் என்று கூறுகின்றனர்.

இறுதியாக நடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தையிட்டியில் சட்டவிரோதமாக விகாரை அமைக்கப்பட்டுள்ள தனியார் காணிகளுக்குப் பதிலாக மாற்றுக்காணிகளை மக்கள் கேட்கின்றனர் என்று வடக்கு மாகாண ஆளுநர் தெரிவித்திருந்தார்.

அவரது கருத்தை அன்றே நான் மறுத்திருந்தேன். சட்டவிரோதமான செயற்பாட்டை நியாயப்படுத்தும் நோக்கில் தமிழ் ஆளுநர் ஒருவர் செயற்படக்கூடாது.

சட்டவிரோதக் காணியால் காணிகளை இழந்த சிலரை அழைத்து வடக்கு ஆளுநர் கலந்துரையாடல் நடத்தியதாக அறிந்தோம்.

அந்தக் கலந்துரையாடல் வெளிப்படைத் தன்மையான கலந்துரையாடலாக அமையவில்லை.

மக்கள் பிரதிநிதிகளை இணைத்துக்கொள்ளாது வடக்கு ஆளுநர் தனியாக இந்தக் கலந்துரையாடலை நடத்தியிருக்கின்றார்.

காணிகளை இழந்த மக்களை நாம் சந்தித்திருக்கின்றோம் . அவர்கள் தெளிவாக உள்ளனர்.

கடந்த ஆண்டு இறுதியில் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதம் தொடர்பில் ஆளுநருக்குக் கூறியிருந்தோம்.

மக்களின் பிரதிபலிப்புத் தொடர்பில் சில நாள்களுக்குள் நாங்கள் வெளிப்படையாக அறிந்து அதுதொடர்பில் எதிர்காலத்தில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வோம்.

நடந்து முடிந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் பிரயோசனம் அற்ற ஒன்று என்றே கூறுவேன்.

நாட்டின் ஜனாதிபதி ஒரு மாவட்டத்தின் அபிவிருத்திக் கலந்துரையாடலுக்கு வரும்போது அவர் பிரச்சினைகளுக்குத் தீர்வை முன் வைத்திருக்க வேண்டும்.

மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைக்குத் தீர்வுகளை முன்வைக்காத ஒரு கலந்துரையாடலாகவே இந்தக் கலந்துரையாடல் அமைந்தது-என்றார். 

அண்மைய பதிவுகள்