அம்பாந்தோட்டையில் இரண்டு இளம்பெண்கள் ஓமன் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டதில் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
அம்பாந்தோட்டையைச் சேர்ந்த இரண்டு இளம்பெண்கள் ஓமன் நாட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டு வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரை மாய்த்துள்ளார்.
அம்பாந்தோட்டை பிரதேச சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஒருவர், டுபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இந்த இரண்டு யுவதிகளையும் ஓமன் நாட்டுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
டுபாயில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி சமுர்த்தி உத்தியோகத்தர் உள்ளிட்டோர் தமது இரண்டு பிள்ளைகளையும் ஏமாற்றி இலங்கையிலிருந்து ஓமான் நாட்டுக்கு அனுப்பியதாக உயிரிழந்த யுவதியின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
குறித்த இரண்டு இளம் பெண்களும் இலங்கையில் உள்ள தமது பெற்றோரிடம் இதனைத் தெரிவித்து தம்மை இதிலிருந்து மீட்குமாறு கேட்டுள்ளனர்.
இதன்படி இரண்டு பிள்ளைகளின் பெற்றோர் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடு செய்யச் சென்றிருந்த போதிலும் வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் உரிய முறைப்பாட்டை ஏற்க மறுத்துள்ளதுடன் இரண்டு மகள்களையும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு எட்டு லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டும் என அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக வெளியுறவு அமைச்சிடம் முறைப்பாடு அளித்துள்ளனர்.
இந்த முறைப்பாடு தொடர்பில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்டோர் அறிந்து கொண்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர் குறித்த யுவதிகளின் வீட்டுக்கு சென்று, வெளிவிவகார அமைச்சில் முறைப்பாடு செய்தது ஏன் என அச்சுறுத்தியதுடன், குறித்த யுவதிகள் இருவரும் ஓமானில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து வேறு இடத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் அம்பாந்தோட்டை மாவட்ட செயலகத்தில் பணி புரிபவர் எனவும், அவர் மற்றுமொரு குழுவுடன் இணைந்து டுபாய், ஓமான், பஹ்ரைன் போன்ற நாடுகளுக்கு மனிதக் கடத்திலில் ஈடுபடுபவர் என்றும் பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.