நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பட்டாசு கொளுத்திய இருவர் யாழ். பருத்தித்துறை பொலிஸாரால் கைது

4 hours ago



நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதத்தில் பட்டாசு கொளுத்திய இருவர் யாழ். பருத்தித்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளிக்கிழமை பருத்தித்துறை பகுதியில இடம்பெற்ற மரணச் சடங்கு ஒன்றின் போது பருத்தித்துறை துறைமுகத்துக்கு அருகாமையில் அதிக சத்தமாக பட்டாசுகள் வெடிக்கவிடப்பட்டன.

இந்த சத்தம் காரணமாக பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்குகளை கொண்டு நடத்த முடியாமல் இருந்ததனால் முற்பகல் 11:50 மணிக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டு நீதிமன்ற பொலிஸார் ஊடாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்துக்கு தகவல் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து விரைந்து செயல்பட்ட பொலிஸார் பட்டாசு கொளுத்திய இருவரை கைது செய்தனர்.

இதனால் 25 நிமிடங்களின் பின்னர் நீதிமன்ற நடவடிக்கைகள் தொடர்ந்தன.

கைது செய்யப்பட்ட இருவரும் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி பருத்தித்துறை நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்படும் போது இருவரும் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.