2025 இலங்கையில் மருந்து தட்டுப்பாடுக்கு வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவிப்பு

1 month ago




அடுத்த ஆண்டு இலங்கையில் சுகாதார கட்டமைப்பில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில்  உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான சரியான கொள்முதல் நடைமுறையை  பின்பற்றாததன் காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடும் என அதன் செயலாளர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

வழமையாக புதிய வருடமொன்று ஆரம்பமாகும்போது, சுகாதார அமைச்சினால் குறித்த வருடத்துக்கான மருந்துகளுக்கான மதிப்பீட்டறிக்கை தயாரிக்கப்பட்டு கொள்வனவுக்கான வேண்டுகோள் விடுக்கப்பட வேண்டும்.

எவ்வாறாயினும், கடந்த அரசின் பலவீனம் மற்றும் கடந்த காலங்களில் சுகாதாரத்துறையின் அதிகாரிகள் பலர் கைது    செய்யப்பட்டமையினால் தற்போது, மருந்து ஒழுங்குபடுத்தல், கொள்வனவு மற்றும் விநியோகம் ஆகிய செயற்பாடுகளில் பாரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மருத்துவ விநியோகப் பிரிவின் தரவுகளுக்கமைய அடுத்த ஆண்டில் பாரியளவில் மருந்து தட்டுப்பாடு ஏற்படக்கூடிய நிலை அவதானிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, இன்சுலின், புற்றுநோய்க்கான மருந்துகள் மற்றும் சில உயிர்காப்பு மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.

எனவே, அரசாங்கம் உரிய கொள்வனவு நடைமுறைகளைப் பின்பற்றி பாரிய பற்றாக்குறைகள் ஏற்படுவதனை தவிர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினது செயலாளர் வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்தார்.

இதேவேளை, நாட்டின் சுகாதார கட்டமைப்பினுள் 300க்கும் அதிகமான மருந்துகளுக்கு முன்னதாக பற்றாக்குறை நிலவிய போதிலும் தற்போது அது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாகச் சுகாதார சேவைகள்பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.



அண்மைய பதிவுகள்