வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா பிணையில் விடுவிப்பு
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் மனுவல் உதயச்சந்திரா நேற்று மன்னார் நீதவான் முன்னிலைப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மனுவல் உதயச்சந்திரா, வைத்திய தேவைகளுக்காக நேற்றுமுன்தினம் மன்னாரில் இருந்து கொழும்பு சென்ற நிலையில், அவரை கைது செய்ய பொலிஸார் அவரது வீட்டுக்கு சென்றனர்.
இந்த நிலையில், மனுவல் உதயச்சந்திராவை கைது செய்யவே வந்துள்ளோம். அவர் வருகை தந்தவுடன், உடனடியாக பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து வாருங்கள் என பொலிஸார் உறவினர்களிடம் தெரிவித்தனர்.
அதற்கமைய நேற்று காலை வீடு திரும்பிய மனுவல் உதயச்சந்திரா, மன்னார் பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகிய வேளை கைது செய்யப்பட்டார்.
விசாரணையின் பின்னர், மன்னார் பொலிஸார் நேற்று மதியம், மன்னார் நீதவான் முன்னிலையில் முன்னிலைப்படுத்தினர்.
இதன்போது, அவரை ஒரு இலட்சம் ரூபா சரீர பிணையில் செல்ல, நீதவான் உத்தரவிட்டார்.
நீதிமன்ற விசாரணை ஒன்றுக்கு முன்னிலையாகாத நிலையிலே, அவரை கைது செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.