சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தமது பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லைகள் இடம்பெற்றிருப்பதாக சில பெற்றோர்கள் என்னிடம் வந்து முறையிட்டிருந்தனர் என வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.
நேற்று (15) ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார்.
இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;
சில வைத்தியர்கள் ஒட்டுமொத்த இளம் தலைமுறைகளையும் தவறாக சித்தரித்து பதிவுகளை இட்டு வருகின்றனர்.இது பொதுமக்களுடனான உறைவை மோசமாகப் பாதிக்கும். வைத்தியசாலையில் கள்வர்களையும் – பாலியல் தொல்லை கொடுக்கும் வைத்தியர்களையும் அனுமதிக்க முடியாது.
சில பெற்றோர்கள் தமது பிள்ளைகளுக்கு வைத்தியசாலையில் வைத்து பாலியல் தொல்லை இடம்பெற்றிருப்பதாக என்னிடம் முறையிட்டனர்.
எழுத்து மூலமாக முறைப்பாட்டை தரக் கோரினேன். இருப்பினும் அவர்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு எழுத்து மூலமாக முறைப்பாட்டை தரவில்லை.
அதனால், தான் நான் இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்ட வைத்தியருடைய அறையை வேறு ஓர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுமாறு கூறினேன் என மேலும் அவர் தெரிவித்திருந்தார்.