தமிழ் மக்களுக்கு தம்மை தாமே ஆளக்கூடிய சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு மிகவும் அவசியம் என்று சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கு தம்மை தாமே ஆளக்கூடிய சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு மிகவும் அவசியம் என்று ஐக்கிய சோசலிசக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் தெரிவிக்கும் போது
"தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணாமல் இலங்கையால் ஓர் அங்குலமேனும் முன்னோக்கிச் செல்ல முடியாது. பொருளாதாரப் பிரச்சினை மட்டும் அல்ல, இனப்பிரச்சினையும் பாரதூரமான பிரச்சினையாகும்.
தேர்தல் நெருங்கும் வேளையில்தான் 13ஆம் சட்ட திருத்தம் பற்றி பேசப்படுகின்றது. இது நகைச்சுவைத்தனமான செயற்பாடாகும். மாகாண சபை முறைமை நடைமுறையில் உள்ளது. அதன் மூலம் பிரச்சினை தீர்ந்ததா? குறைந்தபட்சம் பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களாவது பகிரப்பட்டதா? இல்லை.
அவ்வாறு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்கி இருந்தால் கூட ஓரளவு நம்பிக்கையை வென்றிருக்கலாம். ஜனாதிபதி வேட்பாளர்களில் இனப்பிரச்சினைக்கான தீர்வு எம்மிடம் மட்டுமே உள்ளது. நாம் சுயநிர்ணய உரிமையை ஏற்கின்றோம்.
13ஆம் சட்ட திருத்தம் தீர்வாக அமையாது. அதற்கு அப்பால் சென்று தமது எதிர்காலத்தை தீர்மானிக்கும் உரிமை தமிழர்களுக்கு வழங்கப்படும். ஸ்கொட்லாந்தில் போன்று இங்கு தீர்வு வழங்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.