கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் மழை - வெள்ள அனர்த்தங்களால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் மூன்று முகத்துவாரங்கள் அவசரமாக திறக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, அம்பாறை மாவட்டத்தில் வெள்ள அபாயம் அதிகரித்து வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை தொடக்கம் பெய்து வருகின்ற தொடர் மழை காரணமாக இப் பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டதையடுத்து கல்முனை மாநகர ஆணையாளர் என். எம். நௌபீஸின் அறிவுறுத்தலின் பேரில் சாய்ந்தமருது, கல்முனை மற்றும் பெரிய நீலாவணை ஆகிய இடங்களில் உள்ள தோணா முனைகளான கடல் முகத்துவாரங்கள் தோண்டப்பட்டு வெள்ள நீரை கடலுக்குச் செலுத்துவதற்கான துரித நடவடிக்கை கல்முனை மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்டது.
அத்துடன் கல்முனை கிரீன் பீல்ட் பகுதி உள்ளிட்ட சில இடங்களில் கடும் காற்றால் முறிந்து வீழ்ந்த மரங்களும் மாநகர சபையினரால் உடனுக்குடன் வெட்டி அகற்றப்பட்டு போக்குவரத்து தடங்கல்களும் அபாய நிலைமைகளும் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன் அப் பகுதிகள் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
மேலும் அங்கும் இங்குமாக வடிகான்களில் ஏற்பட்டிருந்த தடைகளும் அகற்றப்பட்டு வெள்ள நீரோட்டம் சீரமைக்கப்பட்டு வருகின்றது.
கல்முனை மாநகர ஆணையாளரின் நேரடி கண்காணிப்பில் பொறியியலாளர் ஏ. ஜே. ஏ. எச். ஜௌசி, உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், கணக்காளர் வை. ஹபீபுல்லாஹ் உள்ளிட்ட அதிகாரிகள் களத்தில் நின்று வெள்ள அனர்த்த கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை நெறிப்படுத்தி வருகின்றனர்.
வெள்ள அபாய நிலையில் இருந்து மக்களை பாதுகாப்பதற்காக இரவு பகலாக ஓய்வின்றி அர்ப்பணிப்புடன் களப்பணியாற்றி வருகின்ற கல்முனை மாநகர சபை ஊழியர்களுக்கு மாநகர ஆணையாளர் என்.எம். நௌபீஸ் நன்றியும் பாராட்டும் தெரிவித்துள்ளார்.