மட்டக்களப்பில் சேனைப் பயிர்ச் செய்கையாளர்களின் குடிசைகளை வனவனத் திணைக்கள அதிகாரிகள் எரித்துள்ளனர் என அப்பகுதி மக்கள் தெரிவிப்பு



மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட புச்சாக் கேணி கிராமசேவகர் பிரிவில் உள்ள நான்காம் கட்டை பகுதியில் சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டு வருவோரின் குடிசைகளை வனவனத் திணைக்கள அதிகாரிகள் எரித்து அடாவடித்தனங்களை முன்னெடுத்துள்ளனர் என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புச்சாங்கேணி கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட நான்காம் கட்டை, மூன்றாம் கட்டை, வெருகல் கல்லரிப்பு ஆகிய பகுதிகளிலேயே வன வளத் திணைக்களத்தைச் சேர்ந்தவர்கள் இந்த அடாவடித்தனத்தை முன்னெடுத்துள்ளனர்.
இந்தப் பகுதிகளில் உள்ள சுமார் 13கொட்டில்கள் தீவைத்து எரிக்கப்பட்டுள்ளன.
பயிர்ச் செய்கைக்காக வைக்கப்பட்டிருந்த கச்சான்,சோளன் விதைகளையும் வனவளத் திணைக்கள அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர் எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
பரம்பரை பரம்பரையாக இப்பகுதியில் சேனைப் பயிர்ச்செய்கையை இந்த மக்கள் முன்னெடுத்து வந்துள்ளமையுடன், யுத்தக் காலத்தின் பின்னர் மீண்டும் பயிர்ச்செய்கையை சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் முன்னெடுத்து வந்த நிலையில், இப் பகுதியில் வனவளத் திணைக்கள அதிகாரிகள் தொடர்ச்சியான தொந்தரவுகளை விடுத்து வந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில் நேற்றுப் புதன்கிழமை பிற்பகல் அப்பகுதிக்குள் நுழைந்த வனவளத் திணைக்கள உத்தியோகத்தர்கள் அங்கிருந்தவர்களை வெளியேற்றும் செயற்பாடுகளை முன்னெடுத்தமையுடன், மக்கள் சொந்தத் தேவைக்கு வெளியே போயிருந்த பகுதியில் உள்ள குடிசைகளைத் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.
இது தொடர்பில் வாகரை பிரதேச செயலாளர், மட்டக்களப்பு மாவட்ட காணி உரிமைக்கான வலையமைப்பு ஆகியவற்றின் கவனத்திற்கு பாதிக்கப்பட்ட மக்களினால் கொண்டு வரப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாவட்ட அரசாங்க அதிபர். மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகியவற்றின் கவனத்திற்கு மட்டக்களப்பு மாவட்ட காணி உரிமைக்கான வலையமைப்பினால் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்ரினா முரளிதரனுடன் தொடர்பு கொண்டு கேட்ட போது, இது தொடர்பிலான தகவல்கள் தனக்கும் கிடைத்துள்ளன எனவும் வாகரை பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு இது தொடர்பான முழுமையான அறிக்கையைக் கோரியுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அந்த பகுதிகள் பிரதேச செயலகத்திற்கு சொந்தமான காணிகளைக் கொண்ட பகுதியாக உள்ளது என்பதை பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார் எனவும், இது தொடர்பில் அப்பகுதிக்கு அவர் நேரடி விஜயம் செய்து உறுதிப்படுத்தியதன் பின்னர் அங்கு இடம்பெற்ற சம்பவத்திற்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேநேரம் நாட்டில் அதிகாரமளிக்கப்பட்டுள்ள அரச அதிகாரிகளினாலையே உயிர் அச்சுறுத்தல் உருவாகும் நிலை காணப்படுகிறது என மட்டக்களப்பு மாவட்ட காணி உரிமைக்கான வலையமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்த வலயமைப்பு விடுத்துள்ள கண்டன அறிக்கையில்
25.02.2025 அன்று 2.00 பிற்பகல் மணியளவில் மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்திற்குட்பட்ட புச்சாக்கேணி கிராமசேவகர் பிரிவில் உள்ள நான்காம் கட்டை பகுதிக்குச் சென்ற வனவளத் திணைக்களத்தினர் நீண்ட காலமாக குடியிருந்து வரும் மக்களை அச்சுறுத்தி, அங்கிருந்து உடனடியாக வெளியேற வேண்டும் என மிரட்டியுள்ளனர்.
மூன்று பேருக்கு எதிராக வழக்கு பதிவு செய்வதற்காக தகவல்களைச் சேகரித்து சென்றுள்ளனர்.
அது மட்டுமல்லாது. குடியிருப்புக்களையும் எரியூட்டியுள்ளனர்.
இச் செயற்பாட்டினை மிக வன்மையாக கண்டிக்கின்றோம்.
இது தொடர்பாக கேள்வியுற்று கதிர வெளியில் இருந்து சென்ற இரு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் நியாயம் கேட்டபோது அவர்களும் மிக மோசமாக தாக்கப்பட்டமையுடன், கைவிலங்கு போடப்பட்டு குற்றவாளிகளை அழைத்துச் செல்வதுபோன்று மிகவும் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர்.
அதன் பின்னர் இருவரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட மனித உரிமைகள் இணைப்பாளர் இசைதீனிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.
அத்துடன் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான இ.சிறிநாத் மற்றும் ஞா.சிறிநேசன் ஆகியோருக்கும் மேற்படி விடயம் தொடர்பில் முறையிடப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட எல்லைப் பகுதிகளில் வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பெரும்பான்மை இனத்தவர்களினால் காடுகள் அழிக்கப்பட்டு, காணிகள் அபகரிக்கப்படும் போது அவர்களுக்கு உதவும் வனவளத் திணைக்களத்தினர், நமது மக்கள் தமது சொந்த மண்ணில் பயிர்ச்செய்கைகள் முன்னெடுக்கும் போது அவர்களுக்கு எதிராக நடவடிக்கையெடுப்பதையும், அச்சுறுத்துவதையும் ஏற்றுக் கொள்ளமுடியாது.
இது தொடர்பில் அரசாங்கம் வனவளத் திணைக்களம் மீது முறையான நடவடிக்கைகள் எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அணி திரட்டி போராட வேண்டிய நிலையேற்படும். - எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய பதிவுகள்

கரீபியன் தீவு நாடான பெலிசேலேவில் கடற்கரை சொகுசு விடுதியொன்றிலிருந்து 3 இளம்பெண்கள் மர்மமான முறையில் உயிரிழந்தனர்

யாழ்.போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தொழிற்சங்க நடவடிக்கையால் நோயாளர்கள் பெரும் அவதியை எதிர்கொண்டனர்.
