இலங்கையில் வடக்கில் இடம்பெறும் மர்மச் சாவுகள், எலிக் காய்ச்சலே காரணம் உறுதிப்படுத்தியது சுகாதாரத்துறை
வடமாகாணத்திலும் -யாழ்ப்பாணத்தில் அதிகளவிலும் சம்பவித்துக் கொண்டிருந்த மர்மச் சாவுகள் பலவற்றுக்கு எலிக் காய்ச்சலே காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
யாழ்ப்பாணத்தில் கடந்த பத்து நாள்களுக்குள் திடீர்க் காய்ச்சல் மற்றும் சடுதியான சுகவீனம் என்பவற்றால் பலர் பாதிக்கப்பட்டு பருத்தித்துறை மந்திகை ஆதார மருத்துவமனையிலும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டிருந்தனர்.'
இவர்களில் 7 பேரின் உடல்நிலை திடீரென மோசமாகி உயிரிழப்புகள் சம்பவித்தன.
சுவாசத் தொகுதியில் ஏற்பட்ட செயலிழப்பு, கடுமையான பாதிப்பு உள்ளிட்ட பொதுவான அறிகுறிகளாலேயே இந்த இறப்புகள் சம்பவித்துக் கொண்டிருந்தன.
இறப்புக்கான காரணங்கள் உறுதிபடத் தெரியாத நிலையில், அவர்களில் பலரின் மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பப்பட்டன.
எலிக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் போன்றன காரணமாகவே இந்த இறப்புகள் சம்பவித்திருக்கலாம் என்று ஊகிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான தொரு பின்னணியிலேயே, இந்த இறப்புகளில் கணிசமானவை எலிக் காய்ச்சலால் தான் சம்பவித்துள்ளதாக தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சடுதியான காய்ச்சல் மற்றும் சுகவீனத்தால் கடந்த சில நாள்களுக்கு முன்னர் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டிருந்த ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.
அவர் உயிருடன் இருக்கும்போதே. அவரிடம் இருந்து மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன.
இதனால், அவரின் இறப்பும் எலிக் காய்சலால்தான் சம்பவித்துள்ளதாகத் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அண்மையில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பேரிடர் காரணமாக வயல்களிலும், பொது இடங்களிலும் மழைநீர் தேங்கி நிற்கின்றது.
இதனால் எலிக்காய்ச்சல் தொற்று தீவிரமாகப் பரவக்கூடிய சாத்தியங்கள் உள்ளதாகவும், பொதுமக்கள் தங்களின் குடிதண்ணீர் மற்றும் ஆரோக்கியம் என்பவற்றில் கூடுதல் கவனத்துடன் செயற்பட வேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.