ட்ரம்பின் வரிவிதிப்புக்கு பதிலடி கொடுப்பது குறித்து பரிசீலிக்கும் கனடா

1 month ago



ட்ரம்பின் வரிவிதிப்புக்கு பதிலடி கொடுப்பது குறித்து பரிசீலிக்கும் கனடா

ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட விடயம், பல நாடுகளில் பலவித கவலைகளை உருவாக்கியுள்ளது.

குறிப்பாக, தான் பதவியேற்றதுமே சில நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.

கனடா, மெக்சிகோ, சீனா முதலான நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது கடுமையான வரிகள் விதிக்கப்போவதாக தெரிவித்துள்ளார் ட்ரம்ப்.

சமூக ஊடகம் ஒன்றில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், ஜனவரி மாதம் 20ஆம் திகதி, தான் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றதும், தான் கையெழுத்திட இருக்கும் முதல் ஆவணங்களில் ஒன்று கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளுக்கு வரி விதிப்பது தொடர்பிலானதாகத்தான் இருக்கும் என்று கூறியுள்ளார்.

கனடா மற்றும் மெக்சிகோவிலிருந்து அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருட்களுக்கும் 25 சதவிகித வரி விதிக்கப்படும் என்று கூறியுள்ளார் ட்ரம்ப்.

இந்நிலையில், கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா அதிக வரி விதிக்குமானால் அதற்கு பதிலடி கொடுப்பது குறித்து கனடா பரிசீலித்து வருவதாக மூத்த கனடா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கனேடிய பொருட்கள் மீது அமெரிக்கா வரி விதிக்கும் பட்சத்தில், பதிலுக்கு அமெரிக்காவிலிருந்து கனடா இறக்குமதி செய்யும் எந்தெந்த பொருட்கள் மீது வரி விதிப்பது என்பது குறித்து கனடா பரிசீலிக்கத் துவங்கிவிட்டதாக அந்த அரசு அதிகாரி தெரிவித்துள்ளார்.

என்றாலும், இதுவரை அது தொடர்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் பெயர் வெளியிட விரும்பாத அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

விடயம் என்னவென்றால், இதற்கு முன் 2018ஆம் ஆண்டு ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியானபோதும், கனடா மீது வரிகள் விதித்தார்.

பதிலுக்கு, கனடாவிலிருந்து அமெரிக்கா இறக்குமதி செய்யும் ஸ்டீல் மற்றும் அலுமினியத்துக்கு கனடா பல பில்லியன் டொலர்கள் புதிய வரிகள் விதிப்பதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அண்மைய பதிவுகள்