சர்வதேச பிணைமுறியாளர்களுடன் ஒப்பந்தம் கைச்சாகலில்லை. முடிந்தால் ஒப்பந்தத்தை பாராளுமன்றில் சமர்ப்பியுங்கள்.-- ஹர்ஷ டி சில்வா தெரிவிப்பு
சர்வதேச பிணைமுறியாளர்களுடன் கைச்சாத்திடவில்லை. முடிந்தால் ஒப்பந்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பியுங்கள் என்று சவால் விடுக்கிறேன்.
வெளிநாட்டு கடன்களை செலுத்தப் போவதில்லை என்று மக்களுக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதி பொய்யாக்கப்பட்டுள்ளது.
அரசாங்கத்தால் ஏமாற்றமடைந்துள்ளதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை (06) நடைபெற்ற இடைக்கால கணக்கறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றியதாவது,
ஐக்கிய நாடுகள் சபையின் 2019 ஆம் ஆண்டு அறிக்கையின் பிரகாரம் நான்கில் ஒரு பெண் துஷ்பிரயோகம் மற்றும் உடலியல் ரீதியில் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு ஒரு நாள் அல்ல எந்நாளும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்.
எமது நண்பர் அநுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகவும், அத்துடன் எம்முடன் இணக்கமாக செயற்பட்ட கலாநிதி ஹரிணி அமரசூரிய பிரதமராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
ஆகவே ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
2024 ஆம் ஆண்டு 44 ஆம் இலக்க அரச நிதி முகாமைத்துவ சட்டத்தின் பிரகாரம் 2025 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப் பகுதிக்கு இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தை தயாரிப்பதற்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தனது கொள்கை பிரகடனத்தில் ' சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்தில் இருந்து விலகினால் பாரதூரமான நெருக்கடிகளை எதிர்க்கொள்ள நேரிடும் ' என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதுவே உண்மை. இதனையே நாங்களும் ஆரம்பத்தில் இருந்து குறிப்பிட்டோம்.
சர்வதேச நாணய நிதியத்தை தவிர்த்து செயற்பட முடியாது. இருப்பினும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒருசில நிபந்தனைகள் மீள்பரிசீலிக்கப்பட வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தினோம்.
தேசிய மக்கள் சக்தி தேர்தல் மேடைகளில் ஒன்றை குறிப்பிட்டு விட்டு தற்போது பாராளுமன்றத்துக்கு பிறிதொன்றை சமர்ப்பித்துள்ளது.
2025 ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையான காலப் பகுதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள இடைக்கால கணக்கறிக்கையில் கடன் சேவை 4000 பில்லியனாக எதிர்பார்க்கப்படுவதுடன், குறித்த நான்கு மாத காலப்பகுதிகளுக்கு 1600 பில்லியன் ரூபா அரச வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக 4800 பில்லியன் ரூபா அரச வருமானம் எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய கடன் மறுசீரமைப்பினால் ஊழியர் சேமலாப நிதிய பயனாளர்கள் பாதிக்கப்பட்டார்கள்.
இவர்களின் நலன் கருதி அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கைகளை எடுக்கும் என்று எதிர்பார்த்தோம்.
இருப்பினும் எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆகவே அரசியல் மேடையில் குறிப்பிட்டது ஒன்று, செய்வது பிறிதொன்று, சர்வதேச பிணைமுறியாளர்களுடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
ஆகவே இனி ஏதும் செய்ய முடியாது என்று ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் குறிப்பிடுவதை அவதானிக்க முடிகிறது.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவில்லை. முடிந்தால் கைச்சாத்திட்ட ஒப்பந்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பியுங்கள் என்று சவால் விடுக்கிறேன்.
சர்வதேச பிணைமுறிகளில் இருந்து பெற்றுக்கெண்ட 12.5 பில்லியன் டொலர் கடன்களில் பெருமளவானவை மோசடி செய்யப்பட்டது.
ஆகவே ஆட்சிக்கு வந்தவுடன் கடன்களை செலுத்த முடியாது என்று சர்வதேச பிணைமுறியாளர்களிடம் குறிப்பிடுவோம் என்று தேசிய மக்கள் சக்தி ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் குறிப்பிட்டது. நாட்டு மக்களிடம் உண்மையை சொல்லுங்கள்.
75 ஆண்டுகால அரசியலில் நாட்டுக்கு ஏதும் நன்மை கிடைக்கவில்லை என்று குறிப்பிடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
இவர்கள் குறிப்பிடுவதைப் போன்று ஏதும் நடக்கவில்லை என்றால். எந்த துறையிலும் நாடு முன்னேற்றமடைந்திருக்காது.
அரசாங்கம் மக்களை ஏமாற்றியுள்ளது. ஏமாற்றமடைந்ததை மக்களும் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.