வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி சீனா அதிக முதலீடுகளை மேற்கொள்ள முயற்சி,-- இராஜதந்திர தகவல்கள் தெரிவிப்பு
வடக்கு, கிழக்கு மாகாணங்களை மையப்படுத்தி சீனா அதிக முதலீடுகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதுடன், அதற்கான முதல்படியாகவே இங்குள்ள விவசாயிகள், மீனவர்கள் மற்றும் வறுமையானவர்களுக்கான உதவிகளை இலங்கைக்கான சீனத் தூதகரம் செய்து வருவதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான பல்வேறு நகர்வுகளில் சீனா இறங்கியிருந்தது.
ஆனால், இந்தியாவின் கடுமையான எதிர்ப்பால் இதற்கு சாத்தியம் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் தற்போதைய அரசாங்கம் சீனாவுடன் ஓரளவு நெருக்கமாக பணியாற்றக் கூடியது என்றும் கடந்த ஆண்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீனாவுக்கு மேற்கொண்டிருந்த இரகசியமான பயணத்தில் சில கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
தற்போதைய அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் வடக்கு, கிழக்கை மையப்படுத்தி சீனா முதலீடுகளை மேற்கொள்ள ஆர்வமாக உள்ளதாகவும் அதற்கான ஆரம்ப கட்ட முயற்சிகளை மேற்கொண்டு உள்ளதாகவும் இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு 1.5 பில்லியன் அளவிலான நிதியை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்துக்கு சீனத் தூதரகம் செலவு செய்துள்ளது.
இந்த நிதியின் ஊடாக வறுமையான மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதுடன், மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கும் பல்வேறு உதவிகளை வழங்கியுள்ளது.
பொதுத் தேர்தலில் பின்னர் கடந்த 19ஆம் 20ஆம் திகதிகளில் வடக்கு மாகாணத்துக்குச் சென்ற இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென் ஹொங், 12 மில்லியன் அளவிவான உதவிகளை வழங்கியுள்ளார்.
அதேபோன்று கிழக்கு மாகாணத்துக்கு 8 மில்லியன் அளவிலான நிதி உதவிகளை வழங்கியுள்ளார்.
இவ்வாண்டு மாத்திரம் இதுவரை 1.5 பில்லியன் அளவிலான உதவிகளை சீனத் தூதரகம் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வழங்கியுள்ளது.
நன்கொடை நிகழ்வுகள் ஊடாக இங்குள்ள சமூகங்களுடன் சீனா சுமுகமான கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளது.
இந்தப் பின்புலத்தில் கடந்த 20ஆம் திகதி யாழ்.ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகச் சந்தப்பில் தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வழங்கிய ஆதரவை சீன தூதுவர் வரவேற்றிருந்தார்.
சீனாவின் இந்த நகர்வுகள் எதிர்காலத்தில் அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் பல்வேறு முதலீடுகளை மேற்கொள்வதற்கு சாதகமான சூழ்நிலைகளை உருவாக்கும் என்றும் இராஜதந்திரிகள் தெரிவித்தனர்.