விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சே சிறையிலிருந்து விடுதலை

6 months ago

விக்கிலீக்ஸ் நிறுவுநர் ஜூலியன் அசாஞ்சே பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையானார்.

இது தொடர்பாக திங்கட்கிழமை இரவு வெளியிடப்பட்ட நீதிமன்ற ஆவணங்களின்படி, தனது விடுதலைக்கு ஈடாக இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்தியதற்காக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொள்ள அசாஞ்சே ஒப்புக் கொண்டார்.

இதனையடுத்து சிறையிலிருந்து அவர் விடுதலையானார். அவர் இந்த வார இறுதியில் அமெரிக்காவின் மரியானா தீவுகளில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் முற்படுவார்.

அங்கே அவர் அமெரிக்க இராணுவ இரகசியங்களை வெளிப்படுத்திய குற்றங்களை ஒப்புக் கொள்கிறார்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த செய்தியாளரான ஜூலியன் அசாஞ்சே கடந்த 2006ஆம் ஆண்டில் விக்கி லீக்ஸ் என்ற இணைய தளத்தை தொடங்கினார்.

கடந்த 2010இல் ஆப்கானிஸ்தான், ஈராக் போர் தொடர்பான இரகசிய ஆவணங்கள் இந்த இணையதளத்தில் வெளியாகின.

இதில் அமெரிக்க இராணுவத்தின் பல்வேறு இரகசியங்கள் அம்பலப்படுத்தப்பட்டன.

பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டார் என்று அவரை கைது செய்ய 2010 நவம்பரில் சுவீடன் நீதிமன்று பிடியாணை பிறப்பித்தது.

கைதிலிருந்து தப்ப அவர், 2012இல் லண்டனில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் அவர் தஞ்சமடைந்தார்.

2019இல் அவருக்கு அளித்த அடைக்கலத்தை ஈக்குவடோர் மீளப்பெற்றது.

இதையடுத்து அவரை பிரிட்டன் பொலிஸார் கைது செய்தனர். கடந்த 5 ஆண்டுகளாக அவர் சிறையிலிருந்தார்.

அமெரிக்காவை உளவு பார்த்தது, இராணுவ இரகசியங்களை திருடியது உட்பட 17 குற்றச்சாட்டுகளை அசாஞ்சே மீது அந்த நாட்டு அரசு சுமத்தி உள்ளது.

அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்று அவரை நாடு கடத்த பிரிட்டிஷ் உள்துறை அமைச்சகம் கடந்த 2022 ஜூனில் ஒப்புதல் அளித்தது.

ஜூலியன் அசாஞ்சே அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படாது என்று அந்த நாட்டு அரசு உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று அவர் தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், ஜூலியன் அசாஞ்சே பிரிட்டன் சிறையிலிருந்து விடுதலையானார்.