ஒடுக்குமுறைச் சட்டங்களை நீக்குவதன் ஊடாக, வாக்குறுதியை நிறைவேற்ற முடியும்.-- "ஒடுக்குமுறைச் சட்டத்துக்கு எதிரான கூட்டிணைவு" ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டு

2 weeks ago



பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் நிகழ்நிலைக் காப்புச் சட்டம் ஆகிய ஒடுக்குமுறைச் சட்டங்களை நீக்குவதன் ஊடாகவே உங்களது தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியும்.

அத்தோடு ஜனநாயகத்தை வலுப்படுத்துவதிலும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதிலும் நீங்கள் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன் கூடிய கடப்பாட்டினை மீளுறுதிப்படுத்த முடியும் என

66 அமைப்புக்களை உள்ளடக்கிய "ஒடுக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான கூட்டிணைவு" ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் சுட்டிக் காட்டியுள்ளது.

ஒடுக்குமுறைச் சட்டங்கள் உடனடியாக நீக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி மேற்குறிப்பிட்ட ஒடுக்குமுறைச் சட்டங்களுக்கு எதிரான கூட்டிணைவு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருக்கிறது.

அக்கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:-

அடிப்படை உரிமைகளையும், சுதந்திரத்தையும் புறந்தள்ளக்கூடிய சட்டங்கள் முற்றாக நீக்கப்படுவதை முன்னிறுத்தி நாம் கடந்த பல வருட காலமாக தனித்தனியாகவும், கூட்டிணைந்தும் பணியாற்றி வருகின்றோம்.

தேசிய மக்கள் சக்தி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன அத்தகைய சட்டங்களுக்கு எதிராகத் தொடர்ச்சியாகக் குரலெழுப்பி வந்திருப்பதுடன், அவற்றை முற்றாக நீக்குவதில் வெற்றியும் கண்டிருக்கின்றன.

உங்களது கட்சி இந்தக் கொள்கையைத் தொடர்ந்து பின்பற்றி வந்திருக்கின்றது.

எனவே நீங்கள் ஜனாதிபதியாகத் தெரிவானதன் பின்னர், தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டதன் பின்னணியில், குறிப்பாக பயங்கரவாதத் தடைச் சட்டம் உள்ளிட்ட மிகமோசமான சட்டங்கள் முற்றாக இரத்துச் செய்யப்படும் எனக் கருதப்பட்டது.

இருப்பினும் தற்போது நபர்களைத் தடுப்புக் காவலில் வைப்பதற்குப் பயங்கரவாதத் தடைச் சட்டம் தொடர்ந்து பிரயோகிக்கப்பட்டு வருவது மிகுந்த கரிசனைகளைத் தோற்றுவித்திருக்கிறது.

இந்தத் தடுத்து வைப்புக்களில் அநேகமானவை வேறு சட்டங்களின் பதியப்பட்ட வழக்குகளுடன் தொடர்புடையவையாகக் காணப்படுகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் ஜனாதிபதி என்ற ரீதியில் நீங்களும், உங்களது அரசாங்கமும் உங்களுடைய நீண்டகால கடப்பாட்டுக்கு அமைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மேலதிகமாக கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தை வெகுவாக ஒடுக்கும் நிகழ் நிலைக் காப்பு சட்டமூலத்தையும் முற்றாக நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும்-என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.