2025ஆம் ஆண்டை வரவேற்க பாற்சோறிற்கு அரிசியற்ற சூழலை மாத்திரமே இந்த அரசு உருவாக்கிது என எம்.பி கயந்த கருணாதிலக தெரிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாட்டிலுள்ள வேலைத்திட்டங்களை மேலும் பலப்படுத்துவதை தவிர இந்த அரசாங்கம் நாட்டு மக்களுக்காக என்ன செய்திருக்கிறது ?
2025ஆம் ஆண்டை வரவேற்பதற்கு பாற்சோறு சமைப்பதற்கு அரிசியற்ற சூழலை மாத்திரமே இந்த அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக தெரிவித்தார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில் -
புதிய அரசாங்கம் ஆட்சியைப் பொறுப்பேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன.
இந்த 100 நாட்களில் தோல்வியடைந்த ஒரு அரசாங்கமாக இதனை மக்கள் எண்ண ஆரம்பித்து விட்டனர்.
24 மணித்தியாலங்களில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதாகக் கூறியவர்கள் 100 நாட்கள் கடந்தும் எவ்வித நடவடிக்கையையும் முன்னெடுக்கவில்லை.
மூன்றில் இரண்டுக்கும் அதிக பெரும்பான்மையுடைய இந்த அரசாங்கத்தால் செய்ய முடியாததை, சிறு பெரும்பான்மையைக் கொண்டிருந்த நல்லாட்சி அரசாங்கத்தில் 100 நாள் வேலைத் திட்டத்தில் நாம் செய்து காட்டினோம்.
2025ஆம் ஆண்டை வரவேற்பதற்கு பாற்சோறு சமைப்பதற்கு அரிசியற்ற சூழலை இந்த அரசாங்கம் உருவாக்கியிருக்கிறது.
அரிசி ஆலை உரிமையாளர்களை மண்டியிடச் செய்வோம் என சபதமிட்ட அரசாங்கம் இன்று அரிசியின் விலையை அதிகரித்து அவர்களுக்கு சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கிறது.
யுத்த காலத்தில் கூட இவ்வாறானா பிரச்னைகள் காணப்படவில்லை. ஜே.வி.பி. கலவரத்தின் போது அரிசி ஆலைகளுக்கு தீ வைக்கப்பட்ட போதிலும், அப்போதைய அரசாங்கம் மக்களுக்கு அரிசி தட்டுப்பாட்டை எதிர்கொள்ள இடமளிக்கவில்லை.
கடந்த அரசாங்கத்தில் இணக்கப்பாடு எட்டப்பட்ட சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத் திட்டங்களை மேலும் பலப்படுத்துவதைத் தவிர இந்த அரசாங்கம் மக்களுக்காக வேறு எதனையும் செய்யவில்லை.
மக்கள் நிவாரணங்களை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் போது, அரசாங்கத்தின் அமைச்சர்களும் எம்.பி.க்களும் தமக்கான தனிப்பட்ட தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக முரண்பட்டுக் கொண்டிருக்கின்றனர்-என்றார்.