இலங்கையில் பெய்துவரும் பலத்த மழையினால் யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் நெற் பயிர்ச்செய்கை நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளன.
எழுதுமட்டுவாழ், மிருசுவில், கரம்பகம், மந்துவில், மீசாலை, சரசாலை, மட்டுவில், அல்லாரை, கச்சாய், கைதடி, நாவற்குழி, தச்சன்தோப்பு மற்றும் தனங்கிளப்பு நெல் வயல் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதேவேளை குடியிருப்புகளில் வெள்ள நீர் உட்புகுந்துள்ளதுடன், கால்நடைகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கன மழை காரணமாக தென்மராட்சி பிரதேசத்தில் 1,303 குடும்பங்களைச் சேர்ந்த 4156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 205 குடும்பங்களைச் சேர்ந்த 728 பேர் தற்காலிக முகாங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் 11 இடைத்தங்கல் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கொடிகாமம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 168 பேரும், போகட்டி அரசினர் தமிழ்க் கலவன் பாடசாலையில் 47 குடும்பங்களைச் சேர்ந்த 281 பேரும், நாவற்குழி - சீயோன் தேவாலயத்தில் 32 குடும்பங்களைச் சேர்ந்த 100 பேரும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கான சமைத்த உணவுகளை பொது அமைப்புகள் மற்றும் பிரதேச இளைஞர்கள் இணைந்து வழங்கின்றனர்.