ஜே. வி. பியினர் ராஜபக்ஷக்களின் சித்தாந்தத்தை பின்பற்றுவதை கைவிட வேண்டும்.-- ரவூப் ஹக்கீம் கோரிக்கை

2 months ago



13ஆவது திருத்தச் சட்டம், அதிகாரப் பகிர்வு தொடர்பில் ஜே. வி. பியினர் ராஜபக்ஷக்களின் சித்தாந்தத்தை பின்பற்றுவதை முழுமையாக கைவிட வேண்டும் என்று சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் பகிரங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்

ஜே.வி.பியினர் மார்க்சிச இடதுசாரித்துவக் கொள்கையைக் கொண்டவர்கள்.

அவர்கள் இரண்டு கிளர்ச்சிகளைச் செய்ததன் பின்னர் மீண்டும் ஜனநாயக வழிக்கு வந்தார்கள்.

அதன் பின்னர் இந்திய - இலங்கை ஒப்பந்தத்துக்கு 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு வெளியிட்டு போராடினார்கள்.

பின்னர் அவற்றையெல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, மாகாண சபைகளுக்கான தேர்தலில்            பங்கேற்று உறுப்புரிமைகளையும் பெற்றுக்கொண்டார்கள்.

இந்தச் செயல்பாடானது            அவர்களின் முற்போக்கான வரவேற்கக் கூடிய பிரதிபலிப்பாகும்.

அதுமட்டுமன்றி நிறைவடைந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர், மாகாண சபை முறைமையை                     அமுலாக்கப் போவதாகவே அறிவித்திருந்தனர்.

இருப்பினும், தற்போது அவர்கள் 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு எதிரான நிலைப்பாடுகளையும் அதிகாரப் பகிர்வு அவசியமில்லை என்ற தோற்றப்பாட்டிலும் கருத்துகளக பகிர்ந்துள்ளார்கள்.

உண்மையில், அதிகாரப் பகிர்வு தேவையில்லை, அபிவிருத்திதான் அவசியம் என்பது ராஜபக்ஷக்களின் சித்தாந்தம்.

அந்த சித்தாந்தம் ஜே.வி.பிக்குள் தற்போது எட்டிப் பார்க்கிறது.

தற்போது நாட்டின் அனைத்து மக்களும் ஐக்கிய இலங்கைக்குள் வாழவேண்டும் என்பதை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்கள். இவ்வாறான நிலையில் அந்தந்த இனங்களுக்குரிய தனித்துவம் பாதுகாக்கப்பட்டு சுயாட்சி அளிக்கப்பட வேண்டும்.

தங்களைத் தாங்களே ஆளுகின்ற வகையில் அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும்.

அதன் மூலமாகத்தான் நாட்டில் உள்ள இனங்களுக்கு இடையிலான நீண்டகால முரண்பாடுகளுக்கு தீர்வை எட்ட முடியும்.

ஆகவே, ஜே.வி.பி. அதிகாரப்பகிர்வு சம்பந்தமான தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.

அவர்கள் மாற்றத்தை ஏற்படுத்துவதாக இருந்தால் முதலில் அவர்களின் கொள்கையில் மாற்றம் ஏற்படுவது அவசியமாகும்.

அதிகாரங்கள் பகிரப்படாமல் உண்மையான மாற்றத்தை அடைவது கடினமான காரியமாகும் - என்றார். 

அண்மைய பதிவுகள்