மீனவர்கள் நேரில் சந்தித்தால் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.--யாழ். இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி தெரிவிப்பு
மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை. அது இடம்பெறுமாயின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி தெரிவித்தார்.
இலங்கைக்கான தூதரகத்தின் பங்களிப்புடன் மிஸ்பா ஜெப மிஷனரி ஆலயத்தின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் முல்லைத்தீவு முள்ளியவளையில் மாபெரும் நத்தார் விழா இடம்பெற்றது.
குறித்த நிகழ்வின் பின்னர் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்-
இந்திய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பல திட்டங்களில் குறிப்பாக வடக்கு, கிழக்கு மாகாணத்திலுள்ள மக்களுக்கு ஆதரவாக மேலும் யாழ்ப்பாண பல்கலைக்கழகம், கிழக்கு பல்கலைக்கழகம் சம்பந்தமான திட்டங்களும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
இலங்கை ஜனாதிபதி இந்தியா பயணிக்கின்றார். அங்கு தங்கியிருந்து இலங்கை சம்பந்தமான பல திட்டங்கள் தொடர்பான அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.
அதில் குறிப்பாக வடக்கு - கிழக்கு மாகாணங்கள் சேர்ந்த பல திட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
ஒக்ரோபர் மாத இறுதியில் மீனவர் பிரச்சினை குறித்து பெரியளவிலான கூட் டம் ஒன்று இடம்பெற்றிருந்தது. அதில் இலங்கை தொடர்பான அதிகாரிகள் சந்தித்திருக்கிறார்கள்.
ஆனால் மீனவர்கள் நேரில் சந்திப்பது இதுவரை நடைபெறவில்லை.
அது இடம்பெறுமாயின் பல பிரச்னைகளுக்கு தீர்வு காணமுடியும் என்றார்.