யாழ்.பலாலி வீதியைப் புனரமைத்து மணல்தரை, அரசடிப் பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்தனர், மக்கள் கடும் சீற்றம்
யாழ்ப்பாணத்தில் பலாலி வீதியைப் புனரமைப்பதாக எண்ணி மணல்தரை மற்றும் அரசடிப் பகுதிகளை வெள்ளத்தில் மூழ்கடித்த அபிவிருத்தியையே அதிகாரிகள் மேற்கொண்டனர் எனக் கந்தர்மடம் பகுதியில் வாழும் மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
யாழ்.பல்கலைக் கழகம் முன்பாக அமைக்கப்பட்ட வீதிப் பணியின் போது வெள்ள வாய்க்காலை எங்கே கொண்டு செல்வது என்ற எந்தவொரு திட்டமிடலும் இன்றி வீதியின் ஒரு பக்கத்தில் வெள்ள வாய்க்கால் அமைத்தனர்.
இராமநாதன் வீதி யாழ்ப்பாணம் மாநகர சபைக்குரிய வீதி என்பதனால் மாநகர சபை இராமநாதன் வீதியை பாதுகாக்க அமைத்த வெள்ள வாய்க்காலை, வீதி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமான பலாலி வீதியில் பரமேஸ்வராச் சந்திவரை கொண்டு வந்து விட்டனர்.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினரோ பலாலி வீதிப் புனரமைப்பின் போது இதில் சரியான கவனம் செலுத்தாது பரமேஸ்வராச் சந்தியில் இருந்து யாழ். நகருக்குச் செல்லும் திசையில் பலாலி வீதியின் இரு பக்கமும் 2 அடி அகல வாய்க்காலை பழம் வீதி ஆரம்பிக்கும் ஆலடிச் சந்திவரை மட்டும் அமைத்தனர்.
அவ்வாறு ஆலடிச் சந்திவரை இரு திசைகளில் வரும் வெள்ள வாய்க்கால் பலாலி வீதிக்கு குறுக்காக ஊடறுத்து ஒரு வாய்க்காலாக இணைக்கப்பட்டு பழம் வீதி வழியாக அரசடி வீதி வரை செல்லும் வெறும் ஒன்றரை அடி அகல வாய்க்காலுடன் இணைக்கப்பட்டுள்ளது.
மாநகர சபைக்கு உரித்தான பழம் வீதியின் ஒன்றரை அடி வாய்க்கால் அப் பிரதேச நீர் ஓடுவதற்கே போதுமானது கிடையாது என்ற நிலையில், இந்த 2 அடி அகலம் கொண்ட இரண்டு வாய்க்கால் ஊடாக - அதாவது 4 அடி அகலத்தால் பாய்ந்து வரும் -நீர் 2 அடி அகலம் கூட இல்லாத வாய்க்காலினால் ஓட முடியாது மணல்தரை வீதி வழியாக ஊருக்குள் பாய்கின்றது.
இவ்வாறு வெளியேறும் நீரே அதிகளவில் மணல்தரை சாமி அம்மா ஒழுங்கையில் தேங்கி அரசடிப் பகுதியினையும் சூழ்கின்றது.
இந்த நிலை தொடர்பில் பல தடவை கூறியும் வீதி அபிவிருத்தி அதிகார சபை கவனம் செலுத்தவில்லை.
இதன் காரணமாக மணல்தரை. அரசடி, சிவன் புது வீதிப் பகுதிகளில் அதிகளவில் வெள்ளம் தேங்குவதாகச் சுட்டிக் காட்டப்படுகின்றது.
எனவே உரியவர்கள் இதற்கு சரியான தீர்வாக பலாலி வீதியில் உள்ள இரு வாய்க்கால்களையும் பழம் வீதியுடன் இணைப்பதனை நிறுத்த வேண்டும் அல்லது அடுத்த மாரி மழைக்கு முன்பாக வீதி அதிகார சபையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடாத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்கின்றனர் அந்தப் பகுதி மக்கள்.